விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி ஆளுநர் தமிழிசையை ராஜ்நிவாஸில் சந்தித்து மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் ஆலோசனை நடத்தினார். புதுவை மாநிலத்தில் கடந்த 1968-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தொடர்ந்து 38 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து கடந்த 2006ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2011 ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது.


அதன்பிறகு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அனந்தலட்சுமி என்பவர் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு, பெண்களுக்கான ஒதுக்கீடை முறைப்படுத்திய பின் தேர்தலை நடத்த வேண்டும் என மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடைமுறைகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.




இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பது சட்ட விரோதம். தேர்தலை நடத்தாமல் அரசு கால தாமதம் செய்வதாக தோன்றினால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்தது. இந்நிலையில் புதுவையை சேர்ந்த பாலாஜி, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது குறித்து மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுவையில் நீண்ட காலமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பது வருந்தமளிக்கிறது. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். வார்டு மறுவரையரை ஏதேனும் நிலுவையில் இருந்தால் நான்கு மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்த்துக்கு உத்தரவிட்டது.


இதையடுத்து நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் இருந்த புதுவை மாநில தேர்தல் ஆணையராக ராய் பி தாமஸ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகள் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. புதுவை மாநிலத்தில் புதுவை, உழவர்கரை, ஏனாம், மாகே, காரைக்கால் என 5 நகராட்சி, வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, திருநள்ளார், நிரவி, டிஆர்.பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி என 10 கொம்யூன் பஞ்சாயத்துகளும் உள்ளன. மொத்தம் 98 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. மறுசீரமைப்பில் புதுவை நகராட்சியில் இருந்த 42 வார்டுகள் 33 வார்டுகளாகவும், உழவர்கரை நகராட்சியில் இருந்த 37 வார்டுகள் 42 வார்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து நகராட்சியிலும் 122 வார்டுகளை சீரமைத்து 116 வார்டுகளாக மாற்றியுள்ளனர்.




மறுசீரமைப்பில் வார்டுகளை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சிகளில் வாக்காளர் எண்ணிக்கை சமமாக இல்லாததையும் சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இப்போது நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வார்டு வாக்காளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றம், ஆட்சேபனை குறித்த பணிகள் நடந்து முடிவடைந்தது. இந்நிலையில் புதுச்சேரி ராஜ்நிவாஸுக்கு வந்த மாநிலத்தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ், ஆளுநர் தமிழிசையுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தியதாக ராஜ்நிவாஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் புதுவையிலும் அக்டோபர் மாதத்துக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. கரோனாவால் தள்ளி போகாது" என்று குறிப்பிடுகின்றன.