முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைதாகி நீண்ட நாள் சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்கிற முழுக்கம் நீண்ட நாட்களாகவே... மாதங்களாகவே... வருடமாகவே... வருடங்களாகவே... இருந்து வருகிறது. 

வெறுமனே கோரிக்கையாக இல்லாமல், பல நேரங்களில் அது அரசியல் ஏவுகணையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஏதேனும் ஒரு கட்சி, எழுவர் விடுதலை குறித்து வாக்குறுதிகளை தரும். சில நேரம் அது  உணர்வுபூர்வமாகவுமு் இருக்கும்.ஆனால் உண்மையில் அது நடந்ததா என்றால், இதுவரை நடந்ததில்லை என்பது தான் உண்மை, சில மணி நேரங்களுக்கு முன் நாம் கேள்விப்பட்ட செய்தி இது தான். 

‛முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என சிறையில் உள்ள ஏழு பேரில் ஒருவரான நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’    என்கிற செய்தி தான் இது. 

 

இதுவே பலருக்கும் அதிர்ச்சியையும், பலரின் கண்டனத்தையும் பெற காரணம் இருக்கிறது. கடந்த தேர்தலின் போதும் சரி, கடந்த ஆட்சியின் போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின், ஏழு பேர் விடுதலை குறித்து பல காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார். அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவை கடுமையாக சாடியிருக்கிறார். இதோ அப்போது திமுக தரப்பிலும் அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தரப்பில் பதிவிடப்பட்ட ட்விட்டர்கள் சில....









 

 

ஆனால் ,இன்று அவர் முதல்வராக இருக்கும் அரசு, நளினியின் கோரிக்கைக்கு தடை கேட்டு மனு செய்திருக்கிறது. முன்பு எதிர்கட்சியாக இருந்த போது, ஆளுங்கட்சி மீது என்ன விமர்சனம் வைத்தார்களோ... அது தான் தற்போது ரிபீட் ஆகியிருக்கிறது...! மாற்றம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

ஆக... எழுவர் விடுதலை இந்த நொடி வரை தமிழ்நாட்டில் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை உணர முடிகிறது. இதற்கும் யாரும் விதிவிலக்கல்ல. இதற்கிடையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதெல்லாம், ஏட்டுச்சுரக்காய் ரகமாக தான்  தெரிகிறது. திமுகவை ஆதரித்த ஈழ ஆதரவாளர்கள், வெளிப்படையாகவே இதை சமூகவலைதளங்களில் கண்டிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், திமுக தரப்பில் ரியாக்ஷன் இல்லை. 

இங்கு அரசியலுக்காக சில நேரங்களில், சட்ட விதிகளை கடந்த உத்திரவாதங்கள் தரப்படுகிறது. அவற்றை நிறைவேற்றும் எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால், அதற்கு விதி வழிவிட வேண்டும். விதி என்பது தலைவிதி அல்ல... எழுதப்பட்ட சட்ட விதி. அந்த சட்டவிதிகள் தான், எழுவர் விடுதலையில் கட்டை போடுவதாக தெரிகிறது. அது , வாக்குறுதி தரும் அனைவருக்கும் தெரியும்; ஆனாலும் அதை கடந்து தான் சில நேரம் அரசியல் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல!