Karur Stampede: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும், பிரச்சாரக் கூட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். பரப்புரையின்போது அவரை பேச்சு கேட்க, அதிகப்படியான மக்கள் குவிந்ததால் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ?
கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சு திணறி பலர் மயக்கமடைந்தனர். இன்று காலை நிலவரப்படி, 8 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உட்பட 39 பேர் பலியான நிலையில், 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் இதுவரை 14 பேரில் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம், ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேரில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர்
இதனிடையே, இரவோடு இரவாக கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பின்போது, தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “அதற்கு தான் உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படிருக்கிறது.
பனையூரில் பதுங்கிய விஜய்
துயர சம்பவம் நடைபெற்ற நிலையில் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரவோடு இரவாக திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த விஜய், தனது பனையூர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்தநிலையில் பனையூர் வீட்டில் ஒரு காவலா ஆய்வாளர் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரண்டு விமான நிலையங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்த விஜய், ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுவிட்டு இதுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன் என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேபோன்று திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருவதாகவும், தவெக தலைவர் பனையுருவி பதுங்கி இருப்பதாகவும் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.