Karur Stampede TVK Vijay: விசாரணை ஆணையத்தின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக, நாமக்கல் மற்றும் கரூரில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அந்தவகையில் கரூர் பரப்புரையின்போது அவரை பேச்சு கேட்க, அதிகப்படியான மக்கள் குவிந்ததால் கடும் கூட்டநெரிசல் எழுந்தது. இதனால் மூச்சு திணறி பலர் மயக்கமடைந்தனர். ஆரம்பத்தில் வெறும் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், நேரம் செல்ல செல்ல பலியானோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. நேற்ரு இரவு வரை, 8 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் என 36 பேர் பலியான நிலையில், 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இந்நிலையில் தற்போது வரை கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
துயரத்திற்கு யார் பொறுப்பு?
காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளை மீறியது, உரிய நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள குறிப்பிட்ட இடத்திற்கு விஜய் வராதது? எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகப்படியான மக்கள் கூடியது? தவெக தரப்பில் கோரப்பட்ட இடத்தை பரப்புரைக்காக காவல்துறை ஒதுக்காதது? விஜய் பேசியபோது மின்சாரம் துண்டிக்கப்படவே, அவரது உரையை கேட்க முண்டியத்துக் கொண்டு மக்கள் முன்னோக்கி சென்றது? விஜயின் பரப்புரை வாகனத்தின் அருகே பள்ளம் இருந்ததாக கூறப்படுவது? கடும் கூட்டம் கூடும் என தெரிந்திருந்தும் குழந்தைகளை எல்லாம் பரப்புரை கூட்டத்திகு பெற்றோரே அழைத்துச் சென்றது? என பல்வேறு காரணங்களும் இந்த ஒட்டுமொத்த துயரத்திற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
விஜய் கைதாகிறாரா? - சி.எம். ஸ்டாலின் பதில்
இதனிடையே, இரவோடு இரவாக கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பின்போது, தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “அதற்கு தான் உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படிருக்கிறது. அந்த ஆணையம் விசாரித்து முழுமையாக சொல்லும். இதற்கிடையில், நீங்கள் கேட்பது போல அரசியல் நோக்கத்தோடு எதையும் நான் சொல்ல விரும்ப வில்லை. மீண்டும் மீண்டும் இதை தான் சொல்லப்போகிறேன். ஆணையம் அதற்காக தான் அமைத்திருக்கிறோம். ஆணையத்தின் மூலம் உண்மை வெளிவரும். உண்மை வெளி வரும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கூட்ட நெரிசலால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.