கோவில் தகராறு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் அங்காளம்மன் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் உரிமை தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்த கோவில் கடந்த வாரம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இருதரப்பினரும் தங்களுக்கே கோவில் உரிமை என்று தகராறு செய்ததை தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை அடுத்து கோவிலை திறக்க உதவிடுமாறு இரு தரப்பினரும் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆவேசமடைந்த எம்.எல்.ஏ. அருள்,
அப்போது ஒரு தரப்பினர் ஆண்களாகவும் மற்றொரு தரப்பில் பெண்கள் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர். பேச்சுவார்த்தையில் கோவில் அரசு நிலத்தில் இருப்பதால், அனைவருக்குமான கோவிலாக மாற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் சூழல் உள்ளது. அதனால், இரு தரப்பும் ஒற்றுமையாக கோவிலை திறந்து விழா நடத்துங்கள் என்று எம் எல் ஏ அருள் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை ஒரு தரப்பினர் ஏற்ற நிலையில், பெண்கள் அணியான மற்றொரு தரப்பு இதையேற்க மறுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண்கள் சொல்வது எதையும் கேட்காமல் தொடர்ந்து கூச்சலிட்டதால், ஆவேசமடைந்த எம்.எல்.ஏ. அருள், பெண்களைப் பார்த்து ’’உங்கள் வீட்டில் ஆம்பள எவனுமே இல்லையா’’ என மரியாதை குறைவாக பேசினார்.
கதறி அழுதபெண்கள்
பொறுப்புமிக்க பதவியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியதை கேட்ட பெண்கள், MLA-விடம் கையெடுத்து கும்பிட்டு இப்படி பேச வேண்டாம் என கதறி அழுதனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருகிறது.