"பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது மகள் சங்கமித்ரா சௌமியா அன்புமணிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது"
அன்புமணி ராமதாஸின் இரண்டாவது மகள்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் - சவுமியா தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் இரண்டாவது மகளான சங்கமித்ராவிற்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சங்கர் பாலாஜி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வந்த சங்கமித்ராவிற்கு, இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், தற்போது சங்கமித்ரா சிகிச்சை பெற்று வருகிறார். தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் பெற்ற சங்கமித்ரா
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டபோது, அன்புமணியின் மகள் சங்கமித்ராவின் பிரச்சாரம் வெகுவாக கவர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற, நாடாளுமன்ற தேர்தலின் போது சௌமிய அன்புமணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததும், கவனம் பெற்று வந்தது. வீடு வீடாக சென்று சங்கமித்ரா பிரச்சாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளராக உருவெடுத்த சங்கமித்ரா
‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கிய அலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக சங்கமித்ரா உருவெடுத்தார். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்த படத்திற்கு, தமிழகத்தில் வரவேற்பு கிடைத்திருந்தது. குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தான் தேர்தல் பிரச்சாரம், தயாரிப்பாளர் மூலம் கவனம் பெற்ற சங்கமித்ரா சௌமியா அன்புமணி தாயாகியுள்ளார். சங்கமித்ராவுக்கு உறவினர்கள் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.