பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே முற்றிய மோதல், இன்னமும் தொடர்ந்து வருகிறது. கட்சியிலிருந்து அருண் எம்எல்ஏ-வை நீக்குவதாக நேற்று அன்புமணி அறிவித்த நிலையில், அவருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது என்றும், கட்சியில் எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் தனக்கே உள்ளதாகவும், ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இவர்களது மோதலால், தொண்டர்கள் தத்தளிப்பில் உள்ளனர்.
ராமதாஸ் கூறியது என்ன.?
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அப்போது, பாமகவில் இருந்து அருள் எம்எல்ஏ-வை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என கூறினார்.
ஜி.கே. மணி மூலம் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து தான், அருளை நீக்க முடிவும் என்றும் பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், பாமக கொறடாவாக அருள் தொடர்வார் என்று கூறிய ராமதாஸ், அருளுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர், இணை பொதுச் செயலாளர் பதவிகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ், செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழுவை கூட்டி, எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்த முடிவு செய்யப்படும் என கூறினார்.
அருள் எம்எல்ஏ-வை நீக்குவதாக அறிவித்த அன்புமணி ராமதாஸ்
முன்னதாக, அருள் எம்எல்ஏ-வை கட்சியில் இருந்த நீக்குவதாக நேற்று அறிவித்தார் அன்புமணி ராமதாஸ். பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே அதிகாரம் தொடர்பாக மோதல் இருந்து வரும் நியில், அருள் எம்எல்ஏ, ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதனால், அவரை கட்சியின் இணை பொதுச்செயலாளராக நியமித்தார் ராமதாஸ்.
இந்த நிலையில், தனக்கு எதிராக செயல்படும் அருளை நீக்குவதாக நேற்று அறிவித்தார் அன்புமணி ராமதாஸ். இந்த அறிவிப்பு பாமக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
அல்லாடும் பாமக தொண்டர்கள்
பாமக நிறுவனர் மற்றும் அவரது மகன் இடையே அதிகாரப் போர் நடந்து வருகிறது. அது, நாளுக்கு நாள் அதிகாமாகிக் கொண்டு போகிறதே தவிர, சமாதானம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது போல் தெரியவில்லை.
யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே, சமாதானம் ஏற்படும். ஆனால், இருவரும் தொடர்ந்து மோதல் போக்கிலேயே இருந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ளது தொண்டர்கள் தான்.
கட்சியை வளர்த்த தந்தை ராமாதாஸ் பக்கம் நிற்பதா அல்லது, கட்சியின் எதிர்காலமாக பார்க்கப்படும் மகன் அன்புமணி ராமதாஸ் பக்கம் நிற்பதா என தெரியாமல் தொண்டர்கள் அல்லாடி வருகின்றனர்.
ஏற்கனவே, ராமதாஸ் அணி, அன்புமணி அணி என பிரிந்து கிடக்கும் பாமக-விற்கு எப்போது விடிவு காலம் வரும் என்று தெரியவில்லை. தேர்தல் வேறு நெருங்குவதால், ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருவருமே உள்ளனர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.