தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக இருந்து வருகின்றன. இரண்டு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தாலும், சிறு கட்சிகளின் பங்களிப்பும் தமிழ்நாடு அரசியலில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு அரசியலில் முக்கிய கட்சியாக இருந்து வருகிறது. பாமக 35 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாடு அரசியலில் பயணித்து வருகிறது. 


பாமகவும் அறிக்கைகளும்...


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக மருத்துவர் ராமதாஸ் இருந்து வருகிறார். தற்பொழுது பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுக்கும் அறிக்கைகள் , தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. பாமக ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அறிக்கை கொடுத்தால், அதில் தரவுகள் துல்லியமாக இருப்பதை ராமதாஸ் உறுதி செய்வார். 


எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம்..


தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கல்வி நிறுவனமாக எஸ்.ஆர்.எம் இருந்து வருகிறது. எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் நிறுவனராக தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.‌ 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, பாமக மற்றும் இந்திய ஜனநாயக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்திருந்தது.  


ராமதாஸ் - பாரிவேந்தர் மோதல்


இந்தநிலையில், 2016 ஆம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸ், எஸ்.ஆர்.எம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அப்பொழுது தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த அறிக்கை இருந்தது. இது தொடர்பான செய்திகள் அச்சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ராமதாஸ் ஒரு பக்கம் அறிக்கை விட்ட நிலையில், மறுபுறம் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ராமதாசுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினார். இருதரப்பும் அவப்பொழுது அறிக்கை மோதல், ஊடகங்கள் வாயிலாக கருத்து மோதல் அதிகரிக்க தொடங்கின. ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பும், பிரச்சனையை மறந்து விட்டு தனிப்பட்ட முறையில் வார்த்தைகளால் மாறி மாறி தாக்கி கொண்டனர். இரண்டு தரப்பும் நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்தனர். 


கூட்டணியில் இருந்து வெளியேறிய பாரிவேந்தர்


இந்த பிரச்சனைக்கு பிறகு, இரண்டு தரப்பும் விரோதிகளாக மாறின. தொடர்ந்து பாஜகவுடன் இணக்கமாக இருந்த இந்திய ஜனநாயக கட்சி, 2019 ஆம் ஆண்டு தேர்தலில், பாமக இருக்கும் கூட்டணியில் இடம் பெற விரும்பாமல், திமுக கூட்டணியில் இணைந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக பாரிவேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு 2021 ஆம் ஆண்டு தேர்தலிலும், பாமக இருக்கும் கூட்டணியை பிடிக்காத பாரிவேந்தர் , மக்கள் நீதி மையம் கூட்டணியில் இணைந்தார். 


மீண்டும் இணைந்த கூட்டணி


இந்தநிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இரு தரப்பும் கசப்புகளை மறந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பயணித்தது. குறிப்பாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி தேர்தலிலும், பாமக போட்டியிட்டபொழுது இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த ரவி பச்சைமுத்து பாமகவிற்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார். அதன் பிறகு இருதரப்பும் இணக்கமாக தொடங்கினர். இரண்டு மாதங்களுக்கு முன்பு , திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரத்தில் எஸ்.ஆர்.எம் தரப்பிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.


இணைந்த கைகள்


இந்தநிலையில் கடந்த 24 ஆம் தேதி பாரிவேந்தர் பிறந்தநாளை முன்னிட்டு, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாரிவேந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இருதரப்பும் கசப்புகளை மறந்து நீண்ட நேரம் தொலைபேசியில், பேசி இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனிப்பட்ட முறையில் ஒரு காலத்தில், விமர்சனங்களை முன்வைத்து வந்த இரண்டு கட்சிகளும், கசப்புகளை மறைந்து இணைந்து இருப்பது புதிய அரசியலுக்கு அச்சாரமாக பார்க்கப்படுகிறது.