"தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாமக நிர்வாகிகள் சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது" 

Continues below advertisement

பாமக உட்கட்சி பிரச்சனை 

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், பாமக இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களின் ஆதரவு இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தரப்பு தொடர்ந்து தெரிவித்து வந்தது. இந்தநிலையில் பாமக அதிகாரப்பூர்வமாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் செயல்படுவதாக தேர்தல் ஆணையமும் அறிவித்திருந்தது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராமதாஸ் தரப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு 

இந்தநிலையில் நேற்று திடீரென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அன்புமணி ராமதாஸ் தரப்பினர் சந்தித்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சில கட்சிகள் வரும் என தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக தெரிவித்து வந்த நிலையில், பாமக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள, பாமகவின் சாதி வாரிய கணக்கெடுப்பு வலியுறுத்திய போராட்டத்தில் அதிமுக கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கட்சியினர் கூறுவது என்ன ?

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் பேசுகையில், தேர்தலுக்கு முந்தைய நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரை பாமக அழைக்கிறது என்றால், அதில் கூட்டணிக்கான வாய்ப்புகள் இல்லை என்று புறம் தள்ளிவிட முடியாது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது அன்புமணியின் எண்ணமாக இருக்கிறது. எனவே பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில், இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்தனர். 

இதுகுறித்து பாமகவினர் கூறுகையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட அன்புமணி முடிவெடுத்து இருக்கிறார். அதற்கான முன்னெடுப்பாகவே இந்த பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தனர். 

அன்புமணியின் போராட்டம் ஏன் ?

இது குறித்து முன்னதாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வரும் திசம்பர் 17&ஆம் தேதி புதன்கிழமை சென்னை எழும்பூர் இராசரத்தினம் திடல் அருகில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு வசதியாகவும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை இன்னும் வலிமையாகவும், பிரமாண்டமாகவும் வலியுறுத்துவதற்கு வசதியாகவும் திசம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டத்தை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி வியாழக்கிழமை நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.

சென்னையில் திசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். சமூகநீதியில் அக்கறை கொண்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்களும், நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு & இணை அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பொதுமக்களும் சென்னையில் நடைபெறவுள்ள தொடர்முழக்கப் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.