சென்னையில் சமீபத்தில் திறக்கப்பட்ட மத்திய கைலாஷ் பாலத்தில் தரம் சரியாக இல்லை என்றும், தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டபட்ட எந்தப் பாலமும் தரமானதாக இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

Continues below advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மத்திய கைலாஷில் அமைக்கப்பட்டிருப்பது L வடிவ மேம்பாலமா அல்லது W பள்ள மேம்பாலமா? தரமின்றி அமைக்கப்பட்டது பற்றி விசாரணை தேவை என்று பதிவிட்டுள்ளார். 

மோசமான தரம்:

மேலும் “சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட L வடிவ மேம்பாலம் மிக மோசமான தரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. சற்று நேரத்திற்கு முன் அந்தப் பாலத்தில் பயணம் செய்த போது அதன் மோசமான தரத்தை நானே அனுபவித்துத் தெரிந்து கொண்டேன். ரூ.61 கோடி மக்கள் பணத்தைக் கொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலம் சிறுவர்களால் விளையாட்டுக்கு கட்டப்பட்டதை விட மிக மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

Continues below advertisement

L வடிவமா? W வடிவமா?

மத்திய கைலாஷ் பாலத்தை கடந்த 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் முதலமைச்சர் திறந்து வைத்தார். ஆனால், 652 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை தூக்கித் தூக்கி போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தில் பயணிக்கும் போது W வடிவத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் பயணித்த உணர்வு தான் ஏற்பட்டது. சாலையே அமைக்கப்படாத மலைப்பாதைகளில் பயணிப்பதை விட மிக மோசமான அனுபவத்தை இந்தப் பாலம் மக்களுக்கு அளிக்கும். இதற்கு காரணம் மிக மோசமான வடிவமைப்பும், கட்டுமானமும் தான்.

மொத்தம் 652 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத் தொகையாக ரூ.60.68 கோடி , அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.100 கோடி என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு உலகத்தரத்தில் பாலத்தை அமைக்க முடியும். ஆனால், இந்த பாலம் உள்ளூர் தரத்தில் கூட இல்லை. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்ப்ட்ட மூன்றாவது மாதத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தைக் கட்டிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் மேற்பார்வையில் கட்டப்பட்ட பாலம் இந்த லட்சணத்தில் தான் இருக்கும்.

”ஊழல் தான் காரணம்”

தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டபட்ட எந்தப் பாலமும் தரமானதாக இல்லை. அதற்குக் காரணம் பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் நடைபெறும் ஊழல்கள் தான். இத்தகைய ஊழல்களை சென்னை உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருக்கிறது. மத்திய கைலாஷ் பாலம் இவ்வளவு மோசமான தரத்தில் கட்டப்பட்டிருப்பதற்கும் ஊழல் தான் காரணமாக இருக்க முடியும். எனவே, மத்திய கைலாஷ் பாலத்தை கட்டுவதில் ஊழல்கள் நடந்ததா? என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். மிக மோசமான தரத்தில் இந்தப் பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.