PM Modi: மக்களவையில் நேற்று ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நிலையில், பிரதமர் மோடியின் இன்றைய உரையின் மிது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


பிரதமர் மோடி மக்களவையில் இன்று உரை:


குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறடு. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி நேற்று தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், விவாதத்தில் அனல் பறந்தது. அவ்வப்போது பிரதமர் மோடி உள்ளிட்டோரும் குறுக்கிட்டதால், ராகுல் காந்தியின் உரை மேலும் சுவாரஸ்யமானது. இந்நிலையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்ற உள்ளார்.


பதிலடி கொடுப்பாரா பிரதமர் மோடி?


மக்களவையில் மாலை நான்கு மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தனது உரைக்கு முன்னதாக, காலை 9:30 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு ஆளும் கட்சியின் எம்.பி.க்களிடம் அவர் நடத்தும் முதல் ஆலோசனை இதுவாகும். கூட்டத்தில் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு முறையும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதேபோன்று கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் எதிர்க்கட்சிகளும் வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் 3.0 ஆட்சியில் மக்களவையில் அவர் ஆற்றவுள்ள முதல் உரை, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் என்ன?


முன்னதாக நேற்று ராகுல் காந்தி மக்களவையில் பேசுகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்படி, கடவுளுடன் நேரடி தொடர்பு கொள்ளும் பிரதமர் மோடி, காந்தி இறந்து விட்டதாகவும், திரைப்படம் மூலமே உலகம் காந்தியை அறிகிறது என்றும் கூறுகிறார்.  இதிலிருந்து உங்கள் அறியாமையை புரிந்து கொள்ள முடிகிறதா? என கேள்வி எழுப்பினார். 


நீட் தேர்வு பணக்கார குழந்தைகளுக்கானதாக மாறியுள்ளதாகவும், மணிப்பூர் மாநிலம் இந்தியாவில் இல்லை என்பது போல பிரதமர் மோடி செயல்படுவதாகவும், அக்னிவீர் திட்டத்தால் ராணுவத்தில் பிளவு ஏற்படும் என்றும் தெரிவித்தார். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல, அவர்கள் வன்முறையை பரப்புகின்றனர் என்றும், ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாஜகவோ, மோடியோ அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்போ பிரதிநிதி கிடையாது என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். அவரது உரையின் போது பிரதமர் மோடி மட்டுமின்றி, அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அவ்வப்போது குறுக்கிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.