ஹைதராபாத்தில் உள்ள இந்தியப் வர்த்தகப் பள்ளியின் இருபதாம் ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். மேலும், தற்போதைய 2022ஆம் ஆண்டுக்கான முதுகலை மாணவர்களின் பட்டமளிப்பு விழாவிலும் அவர் உரையாற்றினார். 


மாணவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா தற்போது `ஆத்மநிர்பார் பாரத்’ என்ற கனவின் வழியில் முன் சென்று கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். ``ஆத்மநிர்பார் பாரத்’, `மேக் இன் இந்தியா’ முதலான கனவுகளுடன் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் இந்தியா முன்னே பயணித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உலகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கும் நாடாக நாம் மாறியுள்ளோம். இந்தியாவின் நூறாவது யூனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






தற்போது ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சென்னையில் சுமார் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டுகிறார். 



இன்று மதியம் ஹைதராபாத் சென்றடைந்த பிரதமர் மோடியை வரவேற்க ஹைதராபாத் பேகம்பெட் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் கூடியிருந்தனர். தன்னை வரவேற்க விமான நிலையத்தில் கூடியிருந்த பாஜக தொண்டர்களிடமும் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். 


தன் உரையில், தெலங்கானா மாநிலத்தின் பெருமையைப் பேசும் விதமாக, `தொழில்நுட்பம் என்றாலே, தெலங்கானா மற்றும் அதன் இளைஞர்களின் உதவியின்றி பேச முடியாது. இந்தத் திறமைகளை மேலும் முழுமையாக பயன்படுத்த தெலங்கானா மாநிலத்திற்கு முற்போக்கு அம்சம் கொண்ட உண்மையுள்ள அரசு உருவாக வேண்டும். உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களுள் ஒன்றாக நாம் இருக்கிறோம். நம் வளர்ச்சியில் தொழில்நுட்பத்திற்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. நம் இளைஞர்களால் தொழில்நுட்பம் வழிநடத்தப்படுகிறது’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 






ஹைதராபாத் சுற்றுப் பயணத்திற்குப் பிறகு பிரதமர் மோடி சென்னைக்கு வந்துள்ளதோடு, இங்குள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சுமார் 11 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இதற்காகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.