பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகளை வீடியோ கான்பரசிங் மூலமாக மேற்கொள்ளும் போது பயனாளி ஒருவரும், அவரது மகளும் பேசியதைக் கேட்டு கண்கலங்கியுள்ளார். 


குஜராத் மாநிலத்தின் பாருச் பகுதியில் உத்கார்ஷ் சமரோ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக  பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார். அப்போது இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.


சவூதி அரேபியாவில் சில ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய போது, கண்ணில் தவறுதலாகப் பயன்படுத்திய சொட்டு மருந்து காரணமாக படிப்படியாக பார்வையிழந்த அயூப் படேல் என்பவரிடம் தனது மகள்களுக்குக் கல்வி அளிக்கிறாரா எனக் கேட்டுள்ளார் பிரதமர் மோடி. அப்போது அவர் தனது மூன்று மகள்களும் பள்ளிக் கல்வி பெற்று வருவதாகவும், அவர்களுள் இருவர் அரசு உதவி பெறுவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அயூப் படேல் தனது மூத்த மகள் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருவதாகவும், அவர் மருத்துவர் ஆக விருப்பம் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். 



உடனே பிரதமர் மோடி அவருடைய மகளை அழைத்து, அவர் ஏன் மருத்துவம் பயில விரும்புகிறார் எனக் கேட்கப்பட்ட போது, அவர் தன்னுடைய தந்தைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையைச் சரிசெய்வதற்காக எனக் கூறினார். இதனைக் கேட்ட பிரதமர் மோடி கண்கலங்கியதோடு, சிறிது நேரம் மௌனமாக இருந்தார். தொடர்ந்து அவர் அந்தச் சிறுமியைப் பாராட்டினார். `உங்கள் பரிவே உங்களின் பலம்’ என அந்தச் சிறுமியிடம் கூறிய பிரதமர் மோடி, அயூப் படேலிடம் அவரது குடும்பம் ஈத் பண்டிகை கொண்டாடியது குறித்து கேட்டறிந்ததோடு, அவரது மகளின் மருத்துவப் படிப்புக்காக என்ன உதவி கேட்டாலும் செய்ய தயார் எனத் தெரிவித்தார். 


`அவர்களின் கனவுகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் அவர் அயூப் படேலிடம் கூறினார். இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.