ஹைதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மூடநம்பிக்கை பழக்கங்களை விமர்சனம் செய்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக மூடநம்பிக்கை கொண்டவர்களால் பணியாற்ற முடியாது எனக் கூறியுள்ள பிரதமர் மோடி, `நான் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நம்புகிறேன். மேலும், துறவி என்ற போதும் மூடநம்பிக்கையை நம்பாத யோகி ஆதித்யநாத்தை நான் பாராட்டுகிறேன். இத்தகை மூடநம்பிக்கை கொண்ட நபர்களிடம் இருந்து நாம் தெலங்கானாவைப் பாதுகாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 


பிரதமர் மோடி ஹைதராபாத்தில் உள்ள இந்திய வர்த்தகப் பள்ளியின் இருபதாம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளார். நாட்டின் பிரதமர் தன் மாநிலத் தலைநகரில் இருக்கும் போதே, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பெங்களூரு சென்று, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, அவரது மகனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி ஆகியோரை அவர்களின் இல்லத்தில் சந்தித்துள்ளார். 



தெலங்கானா மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றதுடன், சந்திரசேகர ராவ் மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, `வாஸ்து’ அடிப்படையில் வீட்டின் இடத்தை மாற்றியது முதலானவை சர்ச்சைக்கு உள்ளாகின. 


கடந்த 2016ஆம் ஆண்டு, பல்வேறு அறிக்கைகளின்படி, சந்திரசேகர் ராவ் `வாஸ்து’ அடிப்படையில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய இல்லத்திற்குக் குடிபெயர்ந்துள்ளார். மேலும், ஹைதராபாத் பேகம்பெட்டில் உள்ள முதல்வர் அலுவலகத்தை முழுவதுமாக மாற்றம் செய்து, 5 அடுக்குகள் கொண்டதாக மாற்றியுள்ளார். நாட்டின் `ஆட்சியாளர்’ பிறரை விட உயரமான இடத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பது சந்திரசேகர ராவின் நம்பிக்கை என்று கூறப்படுகிறது. 


தன் புதிய இல்லத்திற்குக் குடிபெயர்வதற்கு முன்பு, சந்திரசேகர ராவ் தன் பண்ணை வீட்டில் ஆயுத மஹா சண்டி யாகம் நடத்தியுள்ளார். 5 நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதோடு, சுமார் 150 சமையல்காரர்கள் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 7 கோடி ரூபாய் வரை செலவானதாகவும், அதனை சந்திரசேகர ராவும், சில தனியார் நபர்களும் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. 



கடந்த 2018ஆம் ஆண்டு, தனது நியூமராலஜி நம்பிக்கை காரணமாகவும், `6’ என்ற எண் மீது இருந்த பற்றின் காரணமாகவும், செப்டம்பர் 6 அன்று சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை வழங்கியுள்ளார் சந்திரசேகர ராவ். 


கடந்த 2014ஆம் ஆண்டு, ஜூன் 2 அன்று, தெலங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவியேற்க நள்ளிரவு 12.57 மணியைத் தேர்ந்தெடுத்தார் சந்திரசேகர ராவ். இதன் காரணம், இந்த நேரத்தின் கூட்டுத் தொகை 6 என்பதால் தான். மேலும், தன் தேர்தல் பிரசாரங்களிலும் அவர் பயணிக்கும் கார்களின் எண்களின் கூட்டுத்தொகை எப்போதும் 6 என்பதாகவே இருக்கும். 


இதன் காரணமாகவே பிரதமர் மோடி சந்திரசேகர ராவை விமர்சித்துள்ளார்.