பிரதமரும் தமிழகமும் :
வாராது வந்த மாமணி என்பார்களே.. அப்படித்தான், தமிழகத்திற்கான பிரதமரின் பயணமும். எப்போதாவதுதான் வருவார். வரும் போதெல்லாம், கட்சிகள் முதல் சமூகதளங்கள் வரை விமர்சன “தீ” பற்றிக் கொள்ளும். அண்மைக்காலங்களில், கோ பேக் மோடி, வெல்கம் மோடி என டிரெண்டிங் பேச்சு, பட்டிதொட்டியெங்கும் ஆக்கிரமித்துவிடும்.


இப்படியொரு சூழலில்தான், நேற்றைய தினம் பிரதமரின் தமிழக தலைநகர் வருகை நிகழ்ந்தது. வந்தது முதல் சென்றது வரை, தற்போது சமூக வலைதளங்களில் பெரும்பேச்சாக மாறிவிட்டது அதுவும் பிரதமரின் பேச்சும் முதல்வரின் தைரியப்பேச்சும் தற்போது டிவிட்டர் டிரெண்டிங் உலகைத்தாண்டி, அனைத்து வகை ஊடகங்களின் முதன்மைப் பேச்சாக மாறிவிட்டது.






விழாவுக்கு முன்பே தொடங்கிய “முழக்கப்போர்” :


நேற்றைய விழா தொடங்குவதற்கு முன்பாகவே, திமுக மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள், கேலரிகளில் இருந்துக்கொண்டு, தொடர் கோஷங்களை எழுப்பியவண்ணம் இருந்தனர்.  பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை திமுக-வினர் வாழ்த்தியும், பாரத் மாதா கி ஜே என்றும் மோடியை வாழ்த்தியும் பாஜகவினர் கோஷம் எழுப்பி வந்தபோதே, பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்த வாழ்த்து முழக்க மோதல், தலைவர்கள் பேசும் போதும் எதிரொலித்தது. 


டெல்லியும் கண்காணிப்பும் : 


இந்த பரபரப்புகளை எதிர்பார்த்துதான், தமிழகத்தில் பிரதமர் கால் பதித்தது முதல்  திரும்பிச் சென்றது வரை நொடிக்கு, நொடி உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் சென்றுள்ளது. அதுமட்டுமின்றி, பிரதமருக்கு வழிநெடுக கொடுக்கப்பட்ட வரவேற்பு, மேடையில் முதல்வரின் பேச்சு, பிரதமரின் பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு என அனைத்தும் உடனுக்குடன் ஹாட் ரிப்போர்ட்டாக உள்துறை அமைச்சகத்திற்குச் சென்றுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சின் ஒவ்வொரு அணுவும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


“அப்ளாஸ்” வாங்கிய பிரதமர் :


எந்த ஊருக்குப் போனாலும், அந்த ஊர் மொழியில் பேச்சைத்  தொடங்கி, மக்களைக் கவருவதில் வல்லவரான பிரதமர் மோடி, நேற்றும் வணக்கத்தில் தொடங்கி,  சென்னை முதல் கனடா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை என ஆரம்பித்து,  தமிழ், தமிழர் என பேசி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டை கவர்ந்தார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. தமிழகத்திற்கு மத்திய அரசு செய்துள்ள திட்டங்களைப் பட்டியலிட்ட பிரதமர்,  தமிழையும் தமிழனையும் குறிப்பிட்டு அனைவரையும் கவர்ந்தார், அதேபோல்,, புதிய கல்வி கொள்கைக்கு வக்காலத்து வாங்கிச் சென்றதையும் மறந்துவிட  முடியாது. 






“ஸ்கோர்” செய்த முதல் அமைச்சர் :  


பொதுவாக, பிரமதரிடம் மனுவாக, ஒரு மாநில முதலமைச்சர்கள் கொடுக்கும் விடயங்களை எல்லாம், நேற்றைய தினம், மேடையிலேயே பேசி, கோரிக்கை முழக்க பேச்சு போல் உரையாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். அதுவும் இந்திக்கு இணையாக தமிழையும் அலுவல் மொழியாக உயர்த்த வேண்டும் என்பது முதற்கொண்டு ஜிஎஸ்டி நிலுவையை தர வேண்டியது வரை அனைத்தையும் பட்டியலிட்டு பேசினார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு திமுக தொண்டர்களிடயே பெரும் ஆதரவு காணப்பட்டது.


கடும் விமர்சனம் செய்த தமிழக பாஜக :


பிரதமர் இருக்கும் மேடையில் இப்படியா அரசியல் பேசுவது என வறுத்தெடுத்த பாஜக தரப்போ, இது முற்றிலும் தவறு என்றும் பேச ஆரம்பித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, முதல்வர் செய்த சரித்திர பிழை என்றெல்லாம் பேட்டி கொடுத்தார். இதனால், இரு தரப்பின் விமர்சனப் போர், நேற்று இரவே சுடச்சட ஆரம்பித்துவிட்டது.


குஷியான திமுகவினர் :


மேடையிலேயே தைரியமாக கோரிக்கைகளை வைத்து, உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல்கொடுப்போம் என பேசி, சுயமரியாதை தமிழனாக ஜொலித்தார் முதலமைச்சர் என திமுகவும் அதன் ஆதரவு நிலைப்பாட்டாளர்களும் சமுக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 




டெல்லி என்ன நினைக்கிறது?:


ஆனால், டெல்லியைப் பொறுத்தவரை, பிரதமரும் சரி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சரி, 3 மணி நேர தமிழகப் பயணத்தைப் பெரும் வெற்றியாகவே பார்க்கின்றனர். மறக்கமுடியாக பயணமாக மாற்றிய தமிழ்நாட்டிற்கு பெரும் நன்றி  என பிரதமர் ட்வீட் செய்துள்ளார். உள்துறை அமைச்சர் ஒரு படி மேலே சென்று, பிரதமர் மோடி மீது, அன்பும் பாசமும் தமிழகத்தில் பெருகி வருகிறது தமிழகம் பிரதமர் மோடி அவர்களை விரும்புகிறது என தமிழிலேயே ட்வீட் செய்துள்ளார். 


வெற்றி யாருக்கு? :


3 மணி நேரத்தில், 31 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரமதரின் இந்த தமிழகப் பயணத்தை பொறுத்தமட்டில், முதலமைச்சரின் தைரியப்பேச்சு பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமருக்கு கிடைத்த வரவேற்பும், அது தொடர்பாக பிரதமரும் உள்துறை அமைச்சரின் கருத்துகளும் உள்ளூர் பாஜக-வினரை பெரும் உற்சாகம் அடையச் செய்துள்ளது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. எது எப்படி இருந்தாலும், பிரதமரின் பயணத்தின் வெற்றி, இருதரப்பிற்கும் சம அளவில் சென்றுள்ளது என்பதே சரியாக இருக்கும் என்பதே அரசியல் பேசுவோரின் பெரும் கூற்றாக எதிரொலிக்கிறது.