தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் கர்நாடகா கிளம்பிச் சென்றது பாஜகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
குவாட் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினார். இந்தநிலையில் இன்று பிற்பகல் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் தொடங்கப்பட்டதன் 20ம் ஆண்டு கொண்டாட்டத்தில் கொள்ளவும், 2022ல் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்து கொள்வார் என்றும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
முதல்வருக்கு அழைப்பு
இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹைதராபாத் வந்த பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் செல்லவில்லை. பிரதமர் தெலங்கானா வருவதற்கு முன்பாகவே, ஜனதாதள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா மற்றும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆகியோரை சந்திப்பதற்காக சந்திரசேகர் ராவ் கர்நாடகா புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந்த ஆண்டில் நான்கு மாதத்திற்குள்ளாக இரண்டாவது முறையாக தெலங்கானா வந்த பிரதமர் மோடியை, இரண்டாவது முறையாக வரவேற்கச் செல்லாதது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 5ம் தேதி ராமானுஜ ஆச்சாரியாவின் சிலையை திறந்து வைக்கவும், ICRISAT யின் 50ம் ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போதும், பிரதமரை வரவேற்பதற்காக சந்திரசேகர் ராவ் செல்லவில்லை.
ஏன் கலந்துகொள்ளவில்லை
தன் குடும்பத்தில் உள்ளவர்கள் சிலருக்கு கொரோனாத் தொற்று அறிகுறிகள் இருப்பதால் வரவேற்கச் செல்லவில்லை என்று பின்னர் காரணம் கூறியிருந்தாலும் அதை பாஜகவினர் ஏற்கவில்லை. அதே போல தற்போதும் ஏற்கனவே இந்த பயணங்கள் திட்டமிடப்பட்டுவிட்டதால் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று சந்திரசேகர்ராவ் கூறியிருக்கிறார்.
பாஜக விமர்சனம்
பிரதமரை தெலங்கானா முதலமைச்சர் தொடர்ந்து புறக்கணிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் பந்தி சஞ்சய் குமார், பிரதமர் மோடியை நேருக்கு நேர் எதிர்கொள்ள பயந்து கேசிஆர் ஓடி ஒளிகிறார் என்று விமர்சித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சர் பிரதமரை தொடர்ந்து புறக்கணிப்பது போராட்டத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கப்படுகிறது. தெலங்கானாவில் தொடர்ந்து நடைபெறும் மத மோதல்கள், வளர்ச்சித் திட்டங்களில் தெலங்கானா தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், மத்திய அரசு தெலங்கானாவை புறக்கணித்து வருவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்த சந்திரசேகர் ராவ் அதற்கு பதிலடியாக பிரதமரை புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.
மோடி தாக்கு
இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒரு குடும்பத்திற்கென்று அர்பணிக்கப்பட்ட கட்சி அதிகாரத்திற்கு வரும்போது அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் ஊழலின் முகங்களாக உருவாகின்றனர். குடும்பங்களால் நடத்தப்படும் கட்சிகள் தான் நாட்டின் மிகப்பெரிய எதிரிகள். குடும்பக் கட்சிகள் தங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த குடும்பக்கட்சிகள் பொதுமக்களைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காது என்றும், அவர்களது எண்ணமெல்லாம் ஒரு குடும்ப கட்சி எப்படி அதிகாரத்தில் இருந்துகொண்டு எப்படி தங்களால் முடிந்தவரை எவ்வளவு கொள்ளையடிக்கமுடியும் என்பது பற்றிதான் சிந்திப்பார்கள். பொதுமக்கள் முன்னேற்றத்திற்கு என்று அவர்கள் எந்த அக்கறையும் காட்டமாட்டார்கள் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
குடும்ப அரசியல் காரணமாக நாட்டில் உள்ள இளைஞர்கள் அரசியலுக்குள் வருவதற்கான வாய்ப்புகளே கிடைப்பதில்லை. குடும்ப அரசியல்வாதிகளால் இளைஞர்களின் எல்லா கனவுகளும் நசுக்கப்படுவதோடு, அவர்களுக்கான எல்லா கதவுகளும் அடைக்கப்படுகிறது. எனவே குடும்ப அரசியல்வாதிகள் மற்றும் குடும்ப கட்சிகளிடமிருந்து சுதந்திரம் பெறுவதே 21ம் நூற்றாண்டின் சபதமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில் தற்போது ஆளும் இரண்டு கட்சிகளின் மீதுமே குடும்ப அரசியல் விமர்சனம் இருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் குடும்ப அரசியல் குறித்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.