PM Modi BJP RSS: சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பை பிரதமர் மோடி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேமேஜ் ஆன மோடி இமேஜ்?

தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணி ஆட்சி அமைத்தது முதலே, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே கடும் அதிகாரப்போட்டி நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கான முக்கியத்துவத்தை குறைத்து, தனிநபரை காட்டிலும் கட்சியையே வலுவாக முன்னிலைப்படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் நெருக்கடி கொடுத்த வருகிறதாம். இதனிடையே, இந்தியா மட்டுமின்றி சர்வதேச அரங்குகளிலும் நடந்த நிகழ்வுகள், மோடியின் தலைமைத்துவ பிம்பத்தை பாதித்துள்ளதாக பாஜக தலைமை நம்புகிறதாம். இதனால் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பை சமதானப்படுத்துவதோடு, மக்களின் நம்பிக்கையும் பெறும் நோக்கில் பிரதமர் மோடியின் சுதந்திர தின பேச்சு அமைந்துள்ளதாம்.

மும்முனை தாக்குதல்:

  • ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழுத்தம் காரணமாக பாஜகவிற்கான புதிய தலைவரை கூட சுயமாக நியமிக்க முடியாத சூழலில் மோடி - அமித் ஷா கூட்டணி உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோக அரசியல் அற்றும் ஆட்சி அதிகாரமிக்க பதவிகளில் மோடியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, கட்சியை முன்னிலைப்படுத்துபவர்களை நிர்ணயிக்க ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறதாம்.
  • இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது நானே என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் பேசி வருவது மோடி அரசுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதுபோக இந்திய பொருட்கள் மீதான 50 சதவிகித வரி விதிப்பும், நாட்டின் வெளியுறுவுக்கொள்கை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது
  • `பாஜகவின் வாக்கு திருட்டுக்கு தேர்தல் ஆணையம் துணைபோயுள்ளதாக, பல ஆதாரங்களை குறிப்பிட்டு ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுபோக, பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியலில், 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பணிந்தாரா மோடி?

இந்நிலையில் தான் சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்தவொரு பிரதமரும் செய்யாததை பிரதமர் மோடி செய்துள்ளார். நேற்றைய சுதந்திர தின உரையின்போது, “ 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அமைப்பு பிறந்தது என்பதை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் தேச கட்டுமானத்திற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன் அத்தியாயம். ஸ்வயம்சேவகர்களே நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஒரு வகையில், RSS உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம். இது 100 ஆண்டுகால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.  நாட்டிற்கான பங்களிப்பு செய்துள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பை சுதந்திர தின உரையில், இந்திய பிரதமர் ஒருவர் குறிப்பிடுவது இதுவே முதல்முறையாகும். கடந்த 11 ஆண்டுகளில் மோடி கூட ஆர்எஸ்எஸ் பெயரை குறிப்பிடாத நிலையில், இந்த முறை சொல்லி இருப்பது அழுத்தத்தின் பேரிலேயே என கூறப்படுகிறது.

பலனளிக்குமா பாஜகவின் பிளான்?

வாக்கு திருட்டு மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் மீதான குற்றச்சாட்டுகளால் ஏற்பட்டுள்ள, அதிருப்தியை ஈடு செய்யவே ஜிஎஸ்டி திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளதாம். இதன் மூலம், தற்போதுள்ள 4 வரி அடுக்குகள் இரண்டாக குறைக்கப்படும் என்றும், இனி அதிகபட்ச வரியாக 18 சதவிகிதமே நிர்ணயிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விலைவாசியை குறைத்து பொதுமக்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. இதன் மூலம், மக்களுக்கான தலைவர் என்ற மோடியின் பிம்பத்தை மேலும் வலுவாக பாஜக விரும்புகிறதாம்.