பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோடியின் புதிய அரசு இன்று பதவியேற்றுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.


இவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்று கொண்டனர்.


இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மத்திய அமைச்சரவையில் மொத்தம் 7 மாநில முன்னாள் முதலமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் யார் என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். 


நரேந்திர மோடி: குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்து வருகிறார். 


ராஜ்நாத் சிங்: பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் பாஜக தேசிய தலைவராக பதவி வகித்தவர். கட்சியில் மட்டும் இன்றி ஆட்சியிலும் பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். பாதுகாப்பத்துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையில், உத்தர பிரதேச முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.


சிவராஜ் சிங் சவுகான்: மத்திய பிரதேச முதலமைச்சராக கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக பதவி வகித்தவர் சிவராஜ் சிங் சவுகான். மொத்தம் 4 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதில் மோகன் யாதவுக்கு முதலமைசச்சர் பதவி வழங்கப்பட்டது.


மனோகர் லால் கட்டார்: ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். கடந்த 1977ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார். பின்னர், 1994ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஹரியானா மாநில பாஜகவின் அமைப்பு செயலாளராக பொறுப்பு வகித்தார்.


சர்பானந்த சோனாவால்: அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். அஸ்ஸாம் கண பரிஷத் கட்சியில் இருந்த இவர், கடந்த 2011ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகவும் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.


பாஜகவை தவிர கூட்டணி கட்சிகளை சேர்ந்த இரண்டு முன்னாள் முதலமைச்சர்களுக்கும் மத்திய அமைச்சரவையில் இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளனர்.


எச். டி. குமாரசாமி: மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஆவார். கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர்.


ஜிதன் ராம் மாஞ்சி: பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர். இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவராக உள்ளார்.