பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பதவியேற்றுள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.


பிரதமராக பதவியேற்ற மோடி: இதற்காக தேசிய தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பெரிதும் உற்று நோக்கி கவனிக்கப்பட்ட மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய தலைவர்கள் பலரும் வந்தனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹா, பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.


இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேருவுக்கு பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் பெருமை மோடியையே சாரும். மோடியை தவிர, பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.


மற்ற மத்திய அமைச்சர்கள் யார்: இவர்களை தவிர, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், மன்சுக் மாண்டவியா, பியூஷ் கோயல், அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.


மத்திய அமைச்சர்களாக மொத்தம் 71 பேர் பதவியேற்றுள்ளனர். கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் லலன் சிங், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான், அப்னா தால் (சோனேலால்) கட்சி தலைவர் அனுப்பிரியா படேல், ராஷ்ட்ரிய லோக் தள கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.