Fact Check Modi: நேற்று முன்தினம், ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். குறிப்பாக, இஸ்லாமியர்கள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பற்றியும்  அவர் கூறிய கருத்துகள் தேசிய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


இஸ்லாமியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேசத்தின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை இருப்பதாக கடந்த 2006ஆம் ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக பன்ஸ்வாரா பொதுக்கூட்டத்தில் பேசினார்.


காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பகிர்ந்து வழங்க அக்கட்சி  வாக்குறுதி அளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். பிரதமர் மோடி சொன்னது உண்மையா? என்பதை ஒன்றன் பின் ஒன்றாக தெரிந்து கொள்ளலாம்.


அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்களா இஸ்லாமியர்கள்?


குடும்ப கட்டுப்பாடு, தாய் மற்றும் சேயின் சுகாதாரம் , ஊட்டச்சத்து, வயது வந்தோரின் ஆரோக்கியம் உள்ளிட்டவை தேசிய அளவில் எந்தளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, சமூகத்தில் அதன் மீதான தாக்கம் என்ன என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இது தொடர்பாக ஆய்வு செய்து தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.


இதையும் படிக்க: PM Modi : "எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைச்சு..முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க" பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை!


மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பின்படி, பிரதமர் மோடி சொன்ன கருத்து உண்மைக்கு புறம்பானது என்பது தெரிய வந்துள்ளது. இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து மதத்தவரின் கருவுறுதல் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருவது ஆய்வின் முடிவுகளின் மூலம் தெரிய வருகிறது.


தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணால் எத்தனை குழந்தைகளை பெற்று கொள்ள முடியும் என்பதை குறிப்பதே கருவுறுதல் விகிதம் ஆகும். இந்த விகிதம் 2.1 ஆக இருந்தால், அது replacement level என அழைக்கப்படும்.  அதாவது, அவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கவும் இல்லை குறையவும் இல்லை நிலையாக இருக்கிறது என அர்த்தம்.


2019-21 தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் 2.36ஆக உள்ளது. அதாவது, அவர்களின் மக்கள் தொகை கிட்டத்தட்ட replacement levelக்கு இணையாக உள்ளது. கருவுறுதல் விகிதத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையேயான வித்தியாசம் என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது.


2015-16 தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்துக்களின் கருவுறுதல் விகிதம் 2.13 ஆக இருந்தது. 2019-21 கணக்கெடுப்பின்படி, இந்த விகிதம் 1.94ஆக குறைந்துள்ளது. அதேபோல, 2015-16 தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் 2.62 ஆக இருந்தது. 2019-21 கணக்கெடுப்பின்படி, இந்த விகிதம் 2.36ஆக குறைந்துள்ளது.


தேசத்தின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை என மன்மோகன் சிங் சொன்னாரா?


கடந்த 2006ஆம் ஆண்டு, டிசம்பர் 6ஆம் தேதி, மன்மோகன் சிங் பேசியது செய்திக்குறிப்பாக வெளியானது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, "நம் அனைவரின் முன்னுரிமைகளே தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன்.


விவசாயம், நீர்ப்பாசனம், நீர்வளம், சுகாதாரம், கல்வி என திட்டங்களை வகுக்கும்போது, எஸ்சி/எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக வகுக்க வேண்டும். வளர்ச்சியில் சம பங்கினை சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினருக்கு வழங்க உறுதிசெய்ய புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளர்ச்சி, வளங்களில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்" என மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


சமூகத்தில் பலவீனமான பிரிவினரை மனதில் வைத்து திட்டங்கள் வகுக்க வேண்டும் என மன்மோகன் சிங் கூறியுள்ளார். ஆனால், அதிலிருந்து இஸ்லாமியர்களை மட்டும் தனித்து மேற்கோள் காட்டியுள்ளார் பிரதமர் மோடி.


சமூகத்தில் பின்தங்கியவர்களா இஸ்லாமியர்கள்? 


இஸ்லாமியர்களை பலவீனமான (பின்தங்கிய) பிரிவு என மன்மோகன் சிங் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அரசின் தரவுகள், அவர் பேசியதற்கு சான்றாக இருக்கின்றன. 2005-06 மத்திய அரசு தரவுகளின்படி, மற்ற மதப்பிரிவினை ஒப்பிடுகையில் பள்ளிக்கு செல்லாவதர்களில் இஸ்லாமிர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதேநிலைதான், 2019-21 ஆண்டிலும் தொடர்கிறது. 2005-06 காலகட்டத்தில், 12 ஆண்டு கால பள்ளி படிப்பை நிறைவு செய்தவர்களின் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களே குறைவாக இருந்தனர். அதேநிலைதான், 2019-21 ஆண்டிலும் தொடர்கிறது.


இதையும் படிக்க: Modi Speech On Muslims : "உங்க சொத்துக்களை புடுங்கி முஸ்லீம்களுக்கு கொடுத்துடுவாங்க" : மோடி சர்ச்சை கருத்து