தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைப்பதற்காக தமிழகம் வந்துள்ள நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தமிழக ஆளுநர் ரவி, பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமரை வரவேற்றார். அவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் துரை முருகன் மற்றும் பொன்முடி ஆகியோர் வணக்கம் தெரிவித்து பிரதமரை வரவேற்றனர்.




பதிலுக்கு பிரதமரும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி நகர்ந்தார். ஃப்ரொட்டகால் படி அடுத்தடுத்த வரிசையில் நின்று கொண்டிருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, பிரதமருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்றார். உடனே அவரை கண்டு மகிழ்ந்த பிரதமர், எடப்பாடி பழனிச்சாமியின் கரங்கள் இரண்டையும் பற்றி, ‛எப்படி இருக்கீங்க...’ என மகிழ்ச்சியோடு நலம் விசாரித்தார். சிறிது நேரம் இபிஎஸ்.,யிடம் பேசிய பிரதமர் மோடி, அதன் பின் தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரின் வரவேற்பை பெற்றார். 




அவர்களுக்கு அடுத்து நின்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனையும் மகிழ்வோடு கையை பற்றி, நலம் விசாரித்த பிரதமர் மோடி, அவரிடமும் சிறிது நேரம் பேசினார். ஆளும் கட்சியான திமுக அமைச்சர்களின் வரவேற்பை வழக்கமான முறைப்படி ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, தங்களது கூட்டணி கட்சி தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும், ஜி.கே.வாசன் ஆகியோரை கொஞ்சம் உரிமையோடு நலம் விசாரித்ததும், அவர்களிடம் சிறிது நேரம் உரையாடியதும்  தமிழக பாஜக கூட்டணி கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பிரதமர் மோடி நாளை தொடங்கும் திட்டங்கள் என்னென்ன..? 



  • மதுரை – தேனி அகல ரயில் பாதை

  • தாம்பரம் – செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை

  • எண்ணூர் – செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் – பெங்களூரு இடையே குழாய் வழியே இயற்கை எரிவாயு திட்டம் 

  • லைட் ஹவுஸ் திட்டத்தில் கட்டப்பட்ட1,152 வீடுகள் திறப்பு 


அடிக்கல் நாட்டும் திட்டம் : 



  • 14 ஆயிரத்து 870 கோடி செலவில் பெங்களூரு - சென்னை இடையே 262 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள விரைவுச் சாலை திட்டம்

  • சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு கொண்ட 4 வழி உயர்மட்ட சாலை திட்டம்

  • நெரலூரு - தருமபுரி பகுதியில் 4 வழி நெடுஞ்சாலை

  • மீன்சுருட்டி - சிதம்பரம் பகுதியில் 2 வழி நெடுஞ்சாலை

  • சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில்வே நிலையங்களை மறுசீரமைக்கும் பணி

  • சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்தும் வகையில் சென்னையில் அமைக்கப்படவுள்ள ’மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்’ திட்டம் 


இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடியோடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.


சென்னையில் போக்குவரத்து மாற்றம்: 


பிரதமர் பயணத்தை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை  செய்தி வெளியிட்டுள்ளது. 


இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பெரியமேடு பகுதியில் உள்ள சாலைகள், ஈ.வெ.ரா. சாலை, ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளை வாகன ஓட்டிகள் தவிா்க்கும்படியும், குறிப்பிட நேரத்தில் வாகனங்கள் மெதுவாகவே செல்ல முடியும் என்பதால் மாற்று சாலைகளை பயன்படுத்தும்படியும் பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இரவு நிகழ்வு முடிந்த பிறகு நேரு விளையாட்டு அரங்கிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலைகள் அனைத்தும் பிரதமர் கார் செல்வதற்காக பிற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படவுள்ளது.