இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வரும் ஜூன் 4ம் தேதி வெளியான பிறகு, யாரை பெட் ரெஸ்ட்க்கு அனுப்புவது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். தேஜஸ்விக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவர்கள் படுக்கையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். இருப்பினும் நரேந்திர மோடியை படுக்கைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டேன் என்றார்.
ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி விமர்சனம்:
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது, "எனது இடுப்பு காயத்திற்கு மருத்துவர், படுக்கையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளார். வலி காரணமாக மூன்று வாரங்களுக்கு வாக்கெடுப்புப் பேரணிகளில் நிற்கவோ பங்கேற்கவோ வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், நரேந்திர மோடிக்கு படுக்கை ஓய்வுக்கு ஏற்பாடு செய்யும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன். மேலும் தனது வலியைக் குறைக்க பெல்ட் அணிந்து, ஊசி போட்டுக் கொண்டு தேர்தல் பேரணிகளை நடத்தி வருவதாகவும் கூறினார்.
பிரதமர் மோடி விமர்சனம்:
இந்நிலையில் பிரதமர் மோடி கிழக்கு சம்பாரானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களுக்கு கடின உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது. ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு மோடிக்கு பெட் ரெஸ்ட் இருக்கும் என்று, ஒருவர் கூறுவதாகக் கேள்விப்பட்டேன்.
ஆனால் நான் பிரார்த்தனை செய்கிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்விலும், பெட் ரெஸ்ட் இருக்கக்கூடாது என்று கடவுளிடம் வேண்டுகிறேன். ஆனால் காட்டு ராஜா வாரிசிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இவர்களுக்கு மோடியை தவறாக விமர்சிப்பதை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை" என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்களவை தேர்தலானது, ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், இதுவரை 5 கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சுக்களானது பரபரப்பை கிளப்பி வருகிறது.