PM CM Removal Bills: முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தொடர்பாக அமித் ஷா கொடுத்த விளக்கங்களையும் ஏற்க மறுத்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர், முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா:
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் அல்லது மாநில அமைச்சர்கள் ஆகியோர் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவி தாமாகவே பறிபோவது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தினார். ஆரம்ப நிலையிலெயே இந்த மசோதாக்களை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சியினர், அடுக்கடுகான கேள்விகளையும் முன்வைத்துள்ளனர். அரசியலமைப்பிற்கு எதிரானது, கொடூரமானது மற்றும் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்று சாடினார்.
”மன்னராட்சிக்கு செல்லும் இந்தியா”
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பேசுகையில், மன்னர் விருப்பப்படி யாரையும் நீக்கக்கூடிய இடைக்காலத்திற்கு நாம் திரும்பிச் செல்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் என்றால் என்ன என்பது பற்றிய கருத்து இல்லை. மன்னருக்கு உங்கள் முகம் பிடிக்கவில்லை என்றால் அவர் அமலாக்கத்துறையிடம் ஒரு வழக்கைப் போடச் சொல்வார். பின்னர் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் பதவியில் இருந்து இறக்கப்படுவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்:
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “இந்த மசோதாவின் திட்டம் தெளிவாக உள்ளது. இது, மாநிலங்கள் முழுவதும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளைப் போடவும், 30 நாள் கைது கூட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு காரணமாகக் கருதும் விதிகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களை பதவி நீக்கம் செய்யவும் பாஜகவை அனுமதிக்கிறது, எந்த தண்டனையும் அல்லது விசாரணையும் இல்லாமல். இந்த அரசியலமைப்புக்கு விரோதமான திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும், ஏனெனில் குற்றம் விசாரணைக்குப் பிறகுதான் தீர்மானிக்கப்படுகிறது, ஒரு வழக்கைப் பதிவு செய்வதன் மூலம் அல்ல. பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருக்கும் NDA-வில் உள்ள பிராந்தியக் கட்சிகளை அச்சுறுத்துவதற்கான ஒரு தீய முயற்சி இது - "எங்களுடன் இணைந்திருங்கள் அல்லது இல்லையென்றால்..." எந்தவொரு வளர்ந்து வரும் சர்வாதிகாரியின் முதல் நடவடிக்கையும், போட்டியாளர்களைக் கைது செய்து பதவியில் இருந்து அகற்றுவதற்கான அதிகாரத்தை தனக்கு வழங்குவதாகும். இந்த மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது” என கடுமையாக சாடியுள்ளார்.
”சூப்பர் எமர்ஜென்சிக்கும் மேலாக..”
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இந்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட முன்மொழியப்பட்ட 130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை நான் கண்டிக்கிறேன். இது ஒரு சூப்பர்-எமர்ஜென்சியை விட மேலான ஒன்றை நோக்கிய ஒரு படியாக, இந்தியாவின் ஜனநாயக சகாப்தத்தை என்றென்றும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு படியாக நான் கண்டிக்கிறேன். நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவரும், ஒரு நபர்-ஒரு கட்சி-ஒரு அரசாங்கம் என்ற முடிவை நோக்கி நாட்டை இந்த மசோதா நகர்த்துவதாக” சாடியுள்ளார்.
அமித் ஷா விளக்கம்..
மசோதாவை தாக்கல் செய்த அமித் ஷா, தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறையில் இருந்தபடி, பிரதமரோ, முதலமைச்சர்களோ அல்லது அமைச்சர்களோ அரசாங்கத்தை நடத்துவது சரியா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்யட்டும்” என விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில் ஏராளமானோர் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சியினர் ஊழலுக்கு துணைபோவதன் காரணமாகவே இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அடுக்கடுக்கான கேள்விகளும்..
அதன்படி, “குற்றம் நிரூபிக்கப்படாமலேயே ஒருவரது பதவியை பறிப்பது எப்படி நியாயமாகும்? பாஜக ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்சியை சார்ந்த எந்தவொரு முதலமைச்சர் அல்லது அமைச்சரின் வீட்டிற்கும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு சென்றதாக செய்திகளே வந்தது இல்லையே? மத்திய புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்ட பல முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களும் குற்றமற்றவர்களாகவே விடுதலையாகியுள்ளனர். அப்படி இருக்கையில் வெறும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மட்டுமே ஒருவருக்கு தண்டனை வழங்குவது எப்படி நியாயம்? எதிர்க்கட்சிகளை ஒழிப்பதில் பாஜக தீவிரமாக உள்ளதாக கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன, அதற்கு வழிவகுக்கும் விதமாகவே மசோதா இருப்பது அமித் ஷாவிற்கு தெரியவில்லையா? குதிரைபேர ஆட்சிக்கு சட்டரீதியான உதவியை நாடவே பாஜக அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளதா?” எனவும் ஏராளமான கேள்விகளை அடுக்கியுள்ளனர்.