ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மான்ராஜின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரீட்டா என்பவர் பணம் செலவழித்துள்ளார். மான்ராஜ் வெற்றிபெற்ற பின்னர் தேர்தல் பிரசாரத்திற்காக தான் செலவழித்த பணத்தை திரும்பத் தருமாறு ரீட்டா கோரியுள்ளார். மான்ராஜின் நண்பரான இன்னாசியம்மாள்  மூலமாக பணத்தை தருமாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்கிடையே மான்ராஜும், இன்னாசியம்மாளும் பேசிக் கொண்டதாக  ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ரீட்டாவை அவதூறாகவும், தகாத வார்த்தைகளிலும் மான்றாஜ் பேசியது போல அந்த ஆடியோ பதிவு உள்ளது.

 



 

இந்த வழக்கிலேயே மான்ராஜ் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், "அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக, விரோதிகள் சிலர் சித்தரித்து இந்த ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். எம்எல்ஏவாக இருக்கும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோல ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார். இந்த வழக்கு எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.








 

நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியரை மீதான வழக்குகள் ரத்து 

 

நெல்லை தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் 17ல் கழிவறை சுற்று சுவர் இடிந்தது விழுந்தது . இதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

இந்நிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.அதில்,  "சம்பவம் நடந்த சில மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்ததாகவும், கழிவறை சுற்றுச்சுவர் 2007 லேயே கட்டப்பட்டதாகவும் கூறியிருந்தனர்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,மனுதாரர்கள் இருவரும், இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே  பொறுப்பேற்றுள்ளனர். ஆகவே விபத்திற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க இயலாது எனக் கூறி இருவர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.