சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த மாரிமுத்து தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். நடந்ததை அவர் விவரித்ததாக கூறப்படுகிறது
முன்னதாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தீர்மானக்குழு கூட்டத்தின் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.
இந்த கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரை கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். ரத்தக்காயங்களுடன் வெளியே வந்த அவர் தன்னை தாக்கியவர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரா? என்று கேட்டு தாக்கியதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு ஆளாகியவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஆவார்.
தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இந்த சூழலில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றார். இதனால், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தனித்தனியே தலைமை தாங்க வாருங்கள் என்று இருவருக்கும் ஒற்றைத் தலைமையே என்று சுவரொட்டிகள் ஒட்டியதாலும் பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்னும் சற்று நேரத்தில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்