நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பயிற்சி பட்டறை நடைபெற்றது . இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "தகவல் தொழில்நுட்ப பிரிவு திறமையாலும், கூர்மையாலும் எதிரிகளை வேரோடு அகற்றுவதற்காக தான் இந்த ஆலோசனை கூட்டம். நாமக்கல் மாவட்டத்தை அதிமுகவின் கோட்டை என்று சொல்லும் அளவுக்கு தனது உழைப்பால் உருவாக்கி தந்தவர் தங்கமணி. அவரது முயற்சியால் இந்த மாவட்டத்தின் மக்கள் பல நன்மைகள் பெற்றனர். அதிமுக ஆட்சியில் புதிய புதிய திட்டங்கள் வருவதற்கு காரணமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மாவட்டத்திற்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. ஆனால் எந்த கூட்டத்தைப் பார்த்தாலும் வாய்கிழிய பேசுவார்கள். வார்த்தை ஜாலத்தில் பேசுவார்கள் என்றார். 



மக்கள் விரோத ஆட்சி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இங்குள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர் பட்டாளங்கள். இங்கு உள்ள இளைஞர்கள் தான் தமிழகத்தை ஆளக்கூடிய சிப்பாய்கள். பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை வலைத்தளம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது உங்களுடைய தலையாக கடமை. எங்களுடைய காலத்தில் இது போன்ற வசதி இல்லை. நாங்கள் கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் தொலைபேசியே எங்கள் ஊருக்கு வந்தது. சேலம் விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடனுக்குடன் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அந்தக் கடமை உங்களுக்கு உள்ளது. இந்தியாவிலேயே பூத் கமிட்டியில், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளும் நியமித்தது அதிமுக தான். 40 சதவீத இளைஞர்கள் வலைதளத்தை பயன்படுத்துகின்றனர். அன்றாட செய்திகளை கொண்டு சேர்க்கும் சாதனம் இந்த வலைதளம். ஒரு சில ஊடகங்களும், பத்திரிகைகளும் தான் நமது செய்தியை வெளியிடுகின்றனர். ஆனால் நம்முடைய இளைஞர் பட்டாளங்கள் கழக செய்திகளையும், கருத்துக்களையும் எளிதாக மக்களிடம் சேர்க்கும் உன்னதமான பணியை செய்கிறார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் பணத்தை நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். நாம் மக்களை நம்பி கட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம். பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்று நினைப்பதை முறியடித்து, எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளோம். அதிமுக தான் ஜனநாயக கட்சி. திமுக வாரிசு அரசியல் கொண்டது. கருணாநிதி அவர்களுக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின் கொள்ளைபுற வழியாக ஆட்சிக்கு வந்தார். அவருக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமித்து, அவரை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். திமுக கட்சிக்காக பல ஆண்டு காலமாக, பல்வேறு உயர் பதவிகளை பெற்று உழைத்த மூத்த தலைவர்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி திமுக. அடிமட்ட தொண்டனும் மேடையில் அமரக்கூடிய ஒரே கட்சி அதிமுக. அதற்கு நானே சாட்சி. அதிமுகவில் கட்சிக்காக உழைத்தவர்களை, அவர்களது வீட்டின் கதவைத் தட்டி, அவர்களுக்கு பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. நம்முடைய கட்சிக்கு நீங்கள் எந்த அளவுக்கு விசுவாசமாக உள்ளீர்களோ, உங்களால் இந்த கட்சி எவ்வளவு ஏற்றம் வருகிறதோ அந்த அளவுக்கு நிச்சயம் உங்களுக்கு ஏதாவது ஒரு பதவி தேடி வரும். அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது.


இன்று நான் இருக்கின்றேன் நாளை இந்த மேடையில் வேறு யாராவது ஒருவர் வருவார். அதிமுகவை பொறுத்தவரை மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி. மக்களுக்காக உழைக்கின்ற கட்சி. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த மாதம் இறுதி, அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள், கோரிக்கையை நிறைவேற்றுவது நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடமை. தமிழகத்தின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டு நிவர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு நமது ஆதரவு. நமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். திமுக தேசிய அளவில் இந்தியா கூட்டணி என்று அமைத்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்ற நினைத்தார்கள். ஆனால் காரில் இருந்து டயர் கழண்டு ஓடுவது போல் கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக கழண்டு சென்று கொண்டிருக்கிறது. அவர் ராசியானவர் அல்ல. எங்கே கூட்டணி என்று கேட்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள் அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்கும் என்றார்.



அண்மையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. எவ்வளவு தொழில்கள் தமிழகத்துக்கு வந்துள்ளது. எத்தனை தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எவ்வளவு பேர் பணி செய்து வருகின்றனர் என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நான் கேட்டேன். இப்போது ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார். அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறுகின்றனர். 20 நாட்களுக்கு முன்பு தான் தொழில் முதலீட்டாளர் மாநாடு தமிழகத்தில் நடத்தினார்கள். அப்போதே இவர்களை அழைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருக்கலாமே. சென்னையிலும், திருச்சியிலும் உள்ள ஒரு நிறுவனத்தை ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுபவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின். தூத்துக்குடியில் உள்ள நிறுவனத்திற்கு ஸ்பெயின் சென்று ஒப்பந்தம் போடுகிறார். பெருந்துறையில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்று 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார். இதையெல்லாம் வலைதள மூலம் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஸ்டாலின் தொழில் முதலீடு ஈர்க்கச் செல்லவில்லை. தொழில் முதலீடு செய்வதற்காக ஸ்பெயின் சென்றுள்ளார் என்று மக்கள் சந்தேகப்படுகின்றனர்.


திமுகவை பொறுத்தவரை மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கமாகவும், அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து காட்சி அளிக்கின்றது. அதை அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனே குறிப்பிட்டுள்ளார். முப்பதாயிரம் கோடியை கையில் வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார். அமைச்சர் சொல்லியதை புறம் தள்ளிவிட முடியுமா. அதனால்தான் ஊழல் செய்து கிடைத்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்வதற்காக சென்றுள்ளனர் என்று மக்கள் சந்தேகப்படுகின்றனர். இந்த கட்சியில் என்ன செய்து விடுவார்கள் என்று சொல்பவர்களுக்கு மரணஅடி கொடுக்கும் அளவுக்கு நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகச் செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்" என்று பேசினார்.