ஒற்றை தலைமையும் தலைவலியும்
தமிழகத்தில் தொண்டர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய கட்சி எனக் கூறும் அஇஅதிமுகவின் மிகப்பெரிய ஒற்றைத் தலைவலியாக மாறியிருப்பது, ஒற்றைத் தலைமை பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு வரும் 23-ம் தேதி தீர்வு கிடைக்குமா என்பதுதான் தற்போது அஇஅதிமுக தொண்டர்களின் பில்லியன் டாலர் கேள்வி.
பொதுக்குழு ஏற்பாடுகள்  தீவிரம்
வரும் 23-ம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள பிரம்மாண்ட திருமண மண்டபத்தில், அஇஅதிமுக-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்திருப்பது போன்ற புகைப்படங்களுடன் பெரும் பதாகைகள் மண்டபத்தின் முகப்பு முதல் விழா மேடை வரை வைக்கப்பட்டு வருகின்றன.




தீவிர ஆலோசனையில் OPS, EPS
ஒருபக்கம் பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கத்தில், இபிஎஸ், ஓபிஸ் இல்லங்களில், தனித்தனியே ஆலோசனைகளும் தொண்டர்கள் சந்திப்பும் இடைவிடாமல் நடைபெற்று வருகின்றன. அதிலும், இபிஎஸ்-ஸை ஒற்றைத் தலைமையாக ஏற்கிறோம் எனக் கூறி, பல்வேறு மட்டங்களில் உள்ள அதிமுக பொறுப்பாளர்கள் பெரும்பாலாோ், தொண்டர்களுடன் இபிஎஸ்-ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கின்றனர். திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இபிஎஸ்-ஸுக்கு ஆதரவாகத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
EPS கையே ஓங்குகிறது:




தற்போதைய நிலையில், வெளிப்படையாகத் தெரிவது, அஇஅதிமுக-வின் ஒற்றைத் தலைமையாக, இபிஎஸ் வருவதற்கு  ஆதரவு பல்கிப் பெருகி வருகிறது என்பதுதான். திடீர் திருப்பமாக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்ட சிலர் மறைமுகமாகவும் மா.பா. பாண்டியராஜன் போன்று நேரடியாகவும் இபிஎஸ்-ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
OPS-யின் அடுத்த நகர்வு
இபிஎஸ் அணி ஜோராக களமிறங்கி விளையாடி வரும் நிலையில், மறுபக்கத்தில் ஒபிஎஸ் தரப்பு, சட்டவிதிகளையும் தங்களது சாணக்கியதனத்தையும் நம்பியுள்ளனர். தம்முடைய ஆதரவு தொண்டர்களையும் முக்கிய நிர்வாகிகளையும் ஓபிஎஸ் சந்தித்து வந்தாலும், அவருக்கு 10 மாவட்ட தலைவர்கள்தான் ஆதரவாக உள்ளனர் என்றும் மேலும் 15 மாவட்டத் தலைவர்கள் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், இதில் பலர் இபிஎஸ் பக்கம் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா ஆதரவு ப்ளானும் ப்ளாப்:




சசிகலா தரப்பு ஆதரவுடன், இபிஎஸ்-,ஸை காலி செய்யும் திட்டத்திற்கும், சசிகலா தரப்பில் இருந்து போதிய  ஆதரவு கிடைக்கவில்லையாம். ஓபிஎஸ்-ஸை நம்பி களமிறங்குவதற்கு சசிகலா தரப்பும் நிரம்ப யோசிப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான், பொதுக்குழு நடத்துவதற்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்ற வகையில் ஆவடி போலீஸ் ஆணையருக்கு ஓபிஎஸ் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.



எந்தப்பிரச்சினையும் இல்லை – EPS அணி
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு நடத்த வேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்பி இருப்பதால், சட்டச்சிக்கல்கள் ஏதுமில்லை, நிச்சயம் பொதுக்குழு நடக்கும் என இபிஎஸ்  தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது. அதற்கேற்ப பொதுக்குழு,செயற்குழு ஏற்பாடுகளை இபிஎஸ்  தரப்பு முன்னின்று செய்து வருகிறது.
OPS-யின் மாஸ்டர் ப்ளான்:
தற்போதைய நிலையில், கட்சியின் அதிகாரமிக்க ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் இருக்கும் ஓபிஎஸ், பொதுக்குழுவில் பங்கேற்பது இல்லை என முடிவு செய்துவிட்டார் எனக் கூறப்படுகிறது.  அதற்கேற்பதான், பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும்  எனக் கேட்டு, இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதமும் அனுப்பி, அதை ஆவணமாக ஊடகங்களில் பதிவும் செய்துள்ளார். எந்த அவசர - அவசிய முக்கிய காரணமும் இல்லாமல், பொதுக்குழு கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வரவில்லை என்றால், அந்தப் பொதுக்குழு செல்லுபடியாகுமா என்பது சட்டரீதியாக கேள்வி எழுகிறது. 
மேலும், பொதுக்குழுவிற்கான தீர்மானங்கள் தயாரிப்பு குழுவில் பங்கேற்று ஆலோசனை வழங்கினார் ஓபிஎஸ் என 2 முறை அதிகாரப்பூர்வ  செய்திக்குறிப்பும் வெளியாகியுள்ளது. ஆனால், தீர்மான தயாரிப்பில் இபிஎஸ் நேரில் பங்கேற்றதாக எந்தத் தகவலும் இல்லை. மேலும், இதுவரை  ஒருமனதாக தீர்மானங்களும் தயாராகவில்லை என்று தெரிகிறது. இந் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஸின் கையெழுத்து இல்லாமல், தீர்மானங்களைப் பொதுக்குழுவில் விவாதிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.




பொதுக்குழுவுக்கு சட்டச்சிக்கலா?
ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் பொதுக்குழு நடக்கும்போது, அவரது கையெழுத்து இல்லாமல் தீர்மானங்களை நிறைவேற்ற முடியுமா என்ற சட்டச்சிக்கலும் இருக்கிறது. எனவேதான், ஓபிஎஸ் தரப்பு நம்பிக்கையுடன் தெம்பாக இருக்கிறது என அவர்கள் தரப்பினர் ஆணித்தரமாகக் கூறுகின்றனர். 
ஒருவேளை பொதுக்குழுவை நடத்தி, மெஜாரிட்டி எனும் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒற்றைத்தலைமையாக இபிஎஸ் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், சட்டரீதியாக அது  செல்லுபடி ஆகுமா என்பதுதான்  தற்போது மிகப்பெரிய கேள்வி.  இது  தொடர்பாக, இபிஎஸ்  தரப்பும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, அதற்கேற்ப சில திட்டங்களை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



நீதிமன்றங்களை நோக்கி அஇஅதிமுக?
இருதரப்பின் தற்போது திட்டங்களையும் நகர்வுகளையும் பார்க்கும் போது, பொதுக்குழு நடப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால், ஓபிஎஸ் பங்கேற்பு இருக்காது என்பதுடன், அவரது ஆதரவாளர்களால்,பொதுக்குழுவில் சில-பல சலசலப்புகள் ஏற்படலாம். ஆனால், அதையும் மீறி, பெரும்பான்மை ஆதரவுடன் இபிஎஸ் வெற்றிப் பெறுவார். இருப்பினும், சட்டரீதியாக இது செல்லுப்படியாகாது என நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் தரப்பு செல்லப்போவது நிச்சயம். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, இந்த முடிவுகள் அனைத்திற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என சட்டநிபுணர்கள் கூறுகின்றனர். அது வரை, அஇஅதிமுக “பவர்” இருந்தும், “பவர்” இல்லாத சூழலில்தான்  இயங்கும் என்பதே நிதர்சனம்.