தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போது தேர்தல் கூட்டணிகள் உருவாகத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், திமுக தனது கூட்டணியை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. புதிதாக ஒரு சில கட்சிகளை சேர்க்கவும் திமுக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இந்தநிலையில், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி உடைந்தது. அதிமுக, தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் அணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் தோல்வி அடைந்தன.
தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில், அதிமுக பாஜகவுடன் இணையாது என கருத்து நிலவிய நிலையில், திடீரென அதிமுக பாஜக கூட்டணி உருவாக்கியது. இதனால் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறி வந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.
டி.டி.வி தினகரன் தீர்க்கமான முடிவு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை தனி கட்சியாக இருப்பதால், அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் டி டி.வி தினகரன் இருந்து வந்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக டி.டி.வி தினகரன், இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.
அதாவது அதிமுக ஒன்றிணை வேண்டும் என்பதை விட, திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் மற்றும் ஜெயலலிதாவின் ஆதரவு வாக்குகள் அனைத்தும் ஒரு அணிக்கு கிடைக்க வேண்டும் என்பதால், டிடிவி தினகரன் இந்த முடிவு எடுத்துள்ளார் என தெரிவிக்கின்றனர் அரசியல் வட்டாரங்கள். இதுபோக, கட்சியை ஒன்றிணைப்பது என்பது இடியாப்ப சிக்கல்தான் என்பதால் அந்த முடிவிலிருந்து டி.டி.வி தினகரன் பின் வாங்கினார்.
மனம் மாறிய இ.பி.எஸ்
அதிமுக போன்று கொடி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புகைப்படங்களை பயன்படுத்துவதாக கூறி, அதற்கு தடை விதிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மீது அதிமுக வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார்
கட்சியை பதிவு செய்த ஓ.பி.எஸ் ?
இந்தநிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதற்காக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபிஎஸ் அதிமுகவில் இணைப்பதை எடப்பாடி விரும்பவில்லை என்பதால், டிடிவி தினகரன் போல் புதிய கட்சியாக உருவெடுத்து, கூட்டணியில் தொடர வேண்டும் என பாஜக ஓபிஎஸ்-க்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து புது கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் சாதக பாதங்கள் குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் வெளியேறிய பிறகு, புதிய கட்சி தொடங்குவது மற்றும் அதற்கான பெயர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் பெயர் இணைந்த, பெயர் கொண்ட கட்சி தொடங்க ஆலோசித்து வந்துள்ளார். தனது ஆதரவாளர் பெயரில் ஏற்கனவே கட்சியை பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.