அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் உடல் நல குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் உருவாக காரணமாக இருந்தவர் இவர் தான். 


திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர் கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்டோபர் 14ம் தேதி 1972-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அதிமுக-வை தொடங்கிய எம்ஜிஆருக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர்களில் மாயத்தேவர் மிகவும் முக்கியமான அளிமையாக அறியப்படுகிறார். 


எம்ஜிஆர் அதிமுகவினை தொடங்கிய பிறகு, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி.யான திமுக-வைச் சேர்ந்த ராஜாங்கம் இறந்துவிட, தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இத்தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்து அதிமுக சார்பில் வழக்கறிஞரான மாயத்தேவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆளும் கட்சியான திமுக  தொகுதியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலும், அதிமுகவை வெற்றி பெற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. இத்தேர்தலில் மாயத்தேவரிடம் தேர்தல் அதிகாரிகள் 15க்கும் அதிகமான சின்னங்களை காட்டி ஒன்றினை தேர்வு செய்ய கேட்டுக் கொண்டனர். அப்போது, இரட்டை இலை சின்னத்தினை தேர்வு செய்த மாயத்தேவர், இது வெற்றியின் குறியீடு என்றும், மக்களிடத்தில் கொண்டு செல்ல மிகவும் எளிதாக இருக்கும் என்றும் எடுத்துகூறினார். பின்னர் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் இதுவே அதிமுகவின் சின்னமாகவே இரட்டை இலை நிலைகொண்டு விட்டது. 


பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி இணையருக்கு  1935ம் ஆண்டு அக்டோபர் 15ல்  டி. உச்சப்பட்டி எனும்  கிராமத்தில் பிறந்தார்  மாயத்தேவர்.  பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை சென்னையில் பல்வேறு அரசியல் ஆளுமைகளை உருவாக்கிய  பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக்கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார்.  திமுகவில் இருந்து விலகிய எம்ஜியாருக்கு பக்கபலமாக இருந்தவர் இவர் தான்.  இவரது மறைவுக்கு அதிமுக தலைவர்களான எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


 


இவரது மறைவுக்கு ஓ.பன்னீர் செல்வம் அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கழகம் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த கழக முதல் எம்.பி திரு.மாயத்தேவர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது என குறிப்பிட்டுள்ளார்.