இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 3.5 கோடி மதிப்பில் சுமார் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அளித்திருந்தார். இதன் மூலம் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அள்ள முடியும் எனவும் நம்பினார்.  அந்த தங்க கவசம்  மதுரை அண்ணநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.



அ.தி.மு.க.,வின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது வங்கிக்கு நேரில் வந்து கவசத்தை பெற்று முத்துராமலிங்கத் தேவர் குடும்பத்தினர் - நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைத்து வந்தார். அதன்படி அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்திக்கு முன்பாக மூன்று நாட்களும், ஜெயந்தி முடிந்த பின்பு மூன்று நாட்களும் என கிட்ட தட்ட  ஒருவாரம் பூஜை செய்யப்படும்.



 

இ.பி.எஸ்., தரப்பு அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக  நியமிக்கப்பட்ட பின்னர், இந்த தங்க கவசத்துக்கு உரிமை கோருவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் கடந்த வாரம் எழுத்துப்பூர்வ கடிதத்தை அ.தி.மு.க., சார்பில் கடந்த வாரம் வங்கி நிர்வாகத்திடம் அளித்திருந்தனர். அதற்கு வங்கி நிர்வாகம் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தது.  இந்நிலையில், ஓபிஎஸ் அதிமுக பொருளாளராக நீடிப்பதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்திடம் தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி அவரது சார்பாக ஓபிஎஸ்  ஆதரவாளர்களான ராஜ்யசபா எம்.பி தர்மர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் வங்கியில் கடிதத்தை வழங்கி உள்ளார். தங்க கவசத்தை ஒப்படைப்பதில் இருதரப்பும் உரிமை கோருவதால் வங்கி நிர்வாகம் குழப்பம் அடைந்துள்ளது.  கடந்த 2017 இல் டிடிவி - ஓ.பி.எஸ் இடையிலான சிக்கலின் போது மாவட்ட நிவாகத்திடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. அதே நடைமுறை பின்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  இதனிடையே ஓபிஎஸ் தரப்பில் வங்கியில் கடிதம் வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அதில்..,” எங்கள் தரப்பின் சார்பில் வழக்கம் போல  பன்னீர்செல்வம்  கையெழுத்திட்டு தங்க கவசத்தை பெறுவதற்கான கோப்புகளை வங்கி அதிகாரியிடம் வழங்கினோம். வங்கி அதிகாரிகள் எதிர் தரப்பில் இருந்தும் கோப்புகள் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இரண்டையும் பரிசீலித்து அவர்கள் முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில்  எங்கள் தரப்பிற்கு உரிமை கிடைக்கும் என நம்புவதாகவும், எப்பொழுதும் போல இந்த ஆண்டும் ஓ.பன்னீர்செல்வம் வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெற்று தெய்வத்திருமனாருக்கு அளிப்பார். தர்மம் வெல்லும்” என தெரிவித்துள்ளார்.



 

இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., என இரு தரப்பினரும் கவசத்தை பெற முனைப்பு காட்டி வருவதால் வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அ.தி.மு.க.,வை இரு தரப்பும் சொந்தம் கொண்டாடினும் கவசத்தை யார் பெற்றுக் கொடுப்பது என்ற அரசியல் போட்டி நிலவுகிறது. அதனால் தன்மான பிரச்னையாக ஏற்று இரு தரப்பும் முயற்சி எடுக்கின்றனர். இ.பி.எஸ்., தரப்பில் புதிதாக ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று முறை வங்கி அதிகாரிகளை சந்தித்துள்ளனர். ஆனால் ஓ.பி.எஸ்., தரப்பிற்கு ஏற்கனவே ஆவணங்கள் இருப்பதால் மனு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பும் முயற்சித்தாலும் இந்த முறையும் அதிகாரிகளிடம் தான் கவசம் ஒப்படைக்கப்படும் என சொல்லப்படுகிறது.