அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், தேனி மாவட்ட அதிமுக பிரமுகருமான ஓ.ராஜா, நேற்று முன்தினம், சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என ஏபிபி நாடு இணையத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். இந்நிலையில், அவர் அறிவித்தபடி நேற்று திருச்செந்தூர் வந்த சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஓபிஎஸ்-வும் சசிகலா தலைமையை ஏற்பார் என அவர் பேட்டியளித்திருந்த நிலையில், ஓ.ராஜா உள்ளிட்ட சசிகலாவை சந்தித்தவர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.






 


மேலும் அந்த கடிதத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் இபிஎஸ் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த ஆணை...




ஓ.ராஜா நீக்கப்பட்டதன் பின்னணியாக, ஏபிபி இணையத்திற்கு அவர் அளித்த பேட்டி காரணமாக கூறப்படுகிறது. சசிகலாவை சந்தித்தது மட்டும் அவர் நீக்கத்திற்கு காரணமல்ல, இதற்கு முன் டிடிவி இல்ல விழாவில் அவர் டிடிவி-சசிகலாவை சந்தித்த போது, அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இம்முறை ஏபிபி நாடு இணையத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சசிகலா தலைமையை ஓபிஎஸ் ஏற்பார் என்று கூறியது தான் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அவர் அளித்த பேட்டி இதோ...


கேள்வி: தேனி மாவட்ட தொண்டர்களின் ஒப்புதலோடு தான் சசிகலா இணைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா கூறப்படுகிறது. நீங்களும் உடன் படுகிறீர்களா?


ஓ.ராஜா: நான் தானே அதை ஆரம்பித்து வைத்தேன். அதற்கான ஏற்பாடுகளை செய்ததே நான் தானே. தீர்மானம் போடச் சொன்னதும் நான் தான். அதற்கான ஏற்பாடுகளையும் நான் தான் முன்நின்று செய்தேன். 


கேள்வி: திடீர் என இந்த முடிவு எடுக்க காரணம் என்ன? 


ஓ.ராஜா: திடீர் முடிவு எல்லாம் கிடையாது. தொண்டர்கள் விருப்பப்படுகிறார்கள். தொண்டர்கள் முடிவுக்கு தான் நாம போக வேண்டும். நாமாக முடிவு செய்ய முடியாது. சசிகலா-டிடிவி இணைப்பை தொண்டர்கள் முழுமையாக விரும்புகிறார்கள். 


கேள்வி: சசிகலா அல்லது டிடிவி வந்தால்... ஓபிஎஸ் தலைமை பறிபோகலாமே?


ஓ.ராஜா: ஏன் பறிபோகணும்?  இதற்கு முன் அவர்கள் தலைமையின் கீழ் தானே இருந்தோம். அப்போது எல்லாமே நன்றாக தானே இருந்தது. அவரது தலைமையை ஏற்பதில் அண்ணனுக்கு தயக்கம் இல்லை.


கேள்வி: அப்போ... சசிகலா தலைமை தான் அதிமுகவுக்கு சரியா இருக்கும்னு நினைக்கிறீங்களா?


ஓ.ராஜா: சசிகலா தலைமை எடுத்தால் என்றில்லை... அவர் தலைமை எடுத்தால் தான் அதிமுக நன்றாக இருக்கும். சசிகலா வந்தாலே கட்சி சரியாகிவிடும். 


கேள்வி: சசிகலா வந்தால் போதுமா?  டிடிவியும் வர வேண்டுமா?


ஓ.ராஜா: சசிகலாவும் வர வேண்டும், டிடிவியும் வர வேண்டும். டிடிவி தானே ஒரு காலைத்தில் கட்சிக்கு தலைமை தாங்கினார். 2001-2006 வரை அவர் தானே தலைமையில் இருந்தார். அதனால் அவர்கள் இருவரும் வர வேண்டும். 


கேள்வி: சசிகலா-டிடிவி இடையே நல்ல உடன்பாடு இல்லை என்கிறார்களே?


ஓ.ராஜா: அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதற்குள் என்னால் போகவும் முடியாது. எல்லோரும் ஒன்று சேர்ந்து நல்லபடியா இருக்கணும், எங்களுக்கு அது தான் வேணும்.


கேள்வி: இது தேனியோட விருப்பமா? இல்லை அதை தாண்டி....


ஓ.ராஜா: எங்களை மாதிரியே மற்ற மாவட்டங்களும் இந்த தீர்மானத்தை போடுவாங்க. நானே பல மாவட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறேன். சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் பேசியிருக்கிறேன். அனைவரும் தயாராக உள்ளனர். 


கேள்வி: இந்த கோரிக்கையை ஓபிஎஸ் ஏற்பாரா?


ஓ.ராஜா: தொண்டர்கள் சொல்வதை தான் அவர் செய்வார். அவர் தொண்டர்களின் குரலுக்கு மதிப்பு தருவார். 


கேள்வி: ஓபிஎஸ் ஓகே சொன்னாலும்.... இபிஎஸ் ஓப்புக் கொள்ள வேண்டுமே?


ஓ.ராஜா: இபிஎஸ் தலையிட்டாலும் சரி, தலையிடாவிட்டாலும் சரி,  தொண்டர்கள் ஏற்பாடு செய்துவிட்டோம். இது தொண்டர்களின் விருப்பம்.


கேள்வி: அப்போது சசிகலா சேர்ந்துவிடுவார் என்கிறீர்களா?


சமரசம் இல்லை.... சின்னம்மாவை வரவேற்க தயாராகிவிட்டோம். அவரது தென்மாவட்ட சுற்றுப்பயணத்தில் தேனிக்கு வரும் போது, நானே பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பேன். நான் மட்டுமல்ல, தொண்டர்கள் அனைவரும் அளிப்பார்கள். , என்றார். 


இவ்வாறு அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.