புதுச்சேரியில் கூடுதலாக ரூ.1000 கோடி வருவாய் ஈட்டும் வகையில், மதுபான விற்பனையில் உரிய சீர்திருத்த நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு அதிமுக யோசனைகளை அடுக்கி உள்ளது. புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அதில்.  சின்னஞ்சிறு யூனியன் பிரதேசமான நம் புதுச்சேரி மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் 90 சதவீதமாக இருந்த மத்திய அரசின் நிதிக் கொடை தற்போது 17 சதவீதமாக குறைந்துள்ளது. 2021-22 நிதியாண்டில் ரூ.9,924 கோடி பட்ஜெட்டில் அத்தியாவசிய செலவினங்களுக்காக ரூ.9,029 கோடி தேவைப்படுகிறது. மீதமுள்ள 895 கோடியை தான் நாம் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு செலவிட வேண்டும்.


இதில் மத்திய அரசு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் (2022-2023) 1,729 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கூடுதலாக ரூ.2,000 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற தங்களின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு தவிர்க்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நம் மாநிலம் நிதிநெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நமது வருவாயாக ரூ.6,190 கோடி திரட்ட வேண்டும்.




நிதி நெருக்கடியை தவிர்க்க மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்காத சூழ்நிலை உள்ளதால், நம் மாநில வருவாயை பெருக்குவது நம் அரசின் கடமையாகும். புதுச்சேரியை பொறுத்தவரை மதுபானங்கள் மூலம் தான் நாம் அதிக வருவாயை பெற இயலும். தற்போது கலால் துறையின் மூலம் சுமார் ரூ.1,000 கோடி அளவில், புதுச்சேரி அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை இரட்டிப்பு மடங்காக பெருக்கவதற்கு நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும்.


புதுச்சேரியில் 5 மதுபான தொழிற்சாலைகளும், 85 மொத்த வியாபார உரிமங்களும், 500-க்கும் மேற்பட்ட சில்லரை வியாபார உரிமங்களும் உள்ளன. அனைத்தும் தனியார் மயமாகவே உள்ளது. கலால் துறை கொள்முதல், விநியோகம், சரக்கு இருப்பு போன்றவைகளை கணினி மூலம் கண்காணித்து வந்தாலும் முழு அளவில் வருவாயை திரட்ட முடியாத சூழ்நிலை உள்ளது. மதுபானங்களின் விலையை நிர்ணயிப்பதில் பொதுவான முறை பின்பற்றுவதில்லை.


மேலும், போலி மதுபானங்கள், வரி கட்டாமல் கணக்கில் காட்டப்படாத மதுபானங்கள், வியாபாரத்தில் சமீப காலமாக பெருகி வருகின்றன். இதனால் மாநிலத்தில் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆண்டு ஒன்றிற்கு சுமார் 50 லட்சம் IMFL மதுபான பெட்டிகள் புதுச்சேரியில் உள்ள ஐந்து மதுபான தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தவிர வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 25 லட்சம் மதுபான பெட்டிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6,000 கோடியில் இருந்து ரூ.9,000 கோடி வரை இருக்கக் கூடும்.




ஆனால், அரசுக்கு கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்பு கலால் வரி, உரிமைக் கட்டணம் ஆகியவைகளின் மூலம் சுமார் ரூ.900 கோடி அளவில்தான் கிடைத்து வருகிறது. மதுபான விற்பனை தொழிலில் இருக்கும் ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் மொத்த மதுபான விற்பனை செய்பவர்களின் நலனுக்காக கண்ணுக்கு தெரிந்து வரவேண்டிய மாநில வருவாயை ஆண்டு தோறும் அரசு இழந்து வருவது ஏற்புடையது அல்ல.


தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் போல அரசு ஒட்டுமொத்த மதுபான வியாபாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், அந்த வியாபாரத்தை முறைப்படுத்தும் நோக்குடன் கொள்முதல் மற்றும் விநியோகம் என்ற பணியை மட்டும் செய்யலாம். இதனால், அரசுக்கு உத்தேசமாக ரூ.800 கோடியிலிருந்து ரூ.1,000 கோடி வரை ஆண்டு ஒன்றிற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே, முதல்வர் மதுபான விற்பனையில் உரிய சீர்திருந்த நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்தி மாநிலத்தில் கூடுதல் வருவாய் ஈட்டிட உரிய வழிவகை செய்யவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.