ஆளுநர் ஆ.என்.ரவியை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகை ஆளுநரை பழனிசாமி சந்தித்தார். தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆளுநரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, புகார் மனு ஒன்றை ஆளுநரிடம் இபிஎஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர் நடவடிக்கை ஈடுபடுவது குறித்தும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பழனிசாமி, “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விதிமுறைகளை மீறி அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்பதை உறுதிப்படுத்தவும் ஆளுநரிடம் அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை திமுக அரசு பின்பற்றவில்லை. அதிமுக வேட்பாளர்களது வெற்றியை தாமதமாக அறிவித்தனர். ஆனால், திமுகவினரின் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்தும் ஆளுநரிடம் எடுத்துக்கூறியுள்ளோம்” என்று கூறினார்
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனியாக சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு ஆளுநரை தனித்தனியாக சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்