திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளரான கிருஷ்ணகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக தனது முகநூலில் பதிவிட்டு உள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் மணப்பாறைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் கிருஷ்ணகோபால். தற்போது நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இவர் தோல்வியடைந்தார்.


இந்த நிலையில் கட்சியிலிருந்து விலகியுள்ள அவரது பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கனத்த இதயத்துடன் தேமுதிகவில் இருந்து விலகுவதாகவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பற்றால் தேமுதிகவில் இணைந்து செயல்பட்டுவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தேமுதிகவை தான் குறை சொன்னது இல்லை என தெரிவித்து உள்ள கிருஷ்ணகோபால், இனியும் தேமுதிக மீது குறை சொல்ல மாட்டேன் என தனது முகநூல் பதிவில் கூறி இருக்கிறார்.




கட்சியில் இருந்து விலகுவதாக தான் அறிவித்தவுடன் பலர் தன்னை தொடர்புகொண்டு பேசியதாக அவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், கட்சியை விட்டு விலகுவது குறித்து தெளிவான முடிவையே தான் எடுத்து இருப்பதாக கூறி உள்ள கிருஷ்ணகோபால், அதில் மிகவும் உறுதியாக இருப்பதாக தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.


2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் திருப்தி இல்லாத காரணத்தால் அந்த கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் மிக மோசமாக தோல்வி அடைந்தார்.




தற்போது வெளியாகியுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவிலும் தேமுதிக படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. விஜயகாந்த் கட்சித் தொடங்கி சில ஆண்டுகளிலேயே பெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரும் உயரத்தை அடைந்தது தே.மு.தி.க. திமுக அதிமுகவுக்கு மாற்று என்று பலரும் தேமுதிகவை நம்பினார்கள். அனால், விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போது 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை விட அதிக தொகுதிகளை வென்று  எதிர்கட்சியாக வளர்ந்தது.


2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். இந்த முடிவை ஏற்காத தேமுதிகவின் பல முக்கிய நிர்வாகிகள் அப்போதே கட்சியிலிருந்து விலக தொடங்கினர். அந்த தேர்தலில் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதன் பின்னர் தொடர் சரிவை சந்திக்கத் தொடங்கியது தேமுதிக.


2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமை தாங்கிய தேமுதிகவுக்கு பெரிய அடி விழுந்தது. விஜயகாந்தின் உடல் நிலை மோசமானதால் பிரேமலதா விஜயகாந்தும், அவரது தம்பி சுதீஷும் கட்சியை நிர்வகித்து வந்தனர். ஆனால், தவறான வியூகங்கள் காரணமாக தே.மு.தி.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பல நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.