கரூர் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகளும் ஒருங்கிணைந்து கரூர் நகராட்சி திருமண மண்டபத்தில் நடத்திய மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V. செந்தில்பாலாஜி கலந்து கொண்டு 1,093 பயனாளிகளுக்கு 58.24 கோடி மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார். இதில் கடனுதவி பெற்ற மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் சென்று கடனுதவிக்கான ஆணைகளை வழங்கி அவர்களை வாழ்த்தினார். 




இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் V. செந்தில்பாலாஜி பேசியபோது:- கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் ஒருங்கிணைந்து 1,093 பயனாளிகளுக்கு ரூ.58.24 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் மக்களுக்கான அனைத்து திட்டங்களும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.


வாழ்க்கையில் நேர்மையான வழியில் ஏதேனும் தொழில் செய்து முன்னேற வேண்டும், கல்வி பயில வேண்டும் என்று எதிர்கால கனவுகளை ஏந்தி வங்கியின் கதவுகளை தட்டும் நபர்களுக்கு தயவு செய்து கடனுதவிகளை காலதாமதமின்றி வழங்கிடுங்கள். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடனும், வங்கியை அணுகினால் நமது எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு உங்களை தேடி வருவவோரின் சிறு முன்னேற்றத்திற்கு உதவிடுங்கள்.




கல்வி என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்தி, சமுதாயத்தில் சிறந்தவராக உயர்த்தும். அத்தகைய கல்வியைக் கற்ற வேண்டும் என்ற ஆசையில் கல்விக்கடனுதவி கேட்டுவிண்ணப்பிக்கும் ஏழை,எளிய மாணவ -  மாணவிகள் அனைவருக்கும் கடனுதவி வழங்க முன்வாருங்கள். அவர்களுக்கு கடனுதவி வழங்க ஏதேனும் உத்திரவாதம் தேவைப்பட்டால், அதற்காக நானே கையெழுத்திட தயாராக உள்ளேன். கல்விக்கடன் பெற்று கட்ட இயலாத சூழலில் அவர்களுக்கான கல்விக்கடனையும் நானே செலுத்துகின்றேன். 
 
எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து விட்டோம் இனிமேல் கடனுதவி வழங்க இயலாது என்ற காரணங்களைச் சொல்லி அவர்களின் எதிர்காலத்தை வீணடித்துவிடாமல், கரூர் மாவட்டத்தில் கல்விக்கடன், விவாசயக்கடன், குறு-சிறு தொழில் தொடங்குவதற்காக கடனுதவி கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் 100 சதவிகிதம் கடனுதவி வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். 




தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் கருதி சிறப்புவாய்ந்த பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். ஆட்சி பொறுப்பேற்றவுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ஊக்கத்தொகை, பால்விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெண்களுக்கு நகரப்பேருந்துகளில் இலவச பயணம் என மக்கள் நலன் சார்ந்த சிறப்புவாய்ந்த திட்டங்களில் கையெழுத்திட்டு நிறைவேற்றி காட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். 


நமது கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, புதிய வேளாண்மைக் கல்லூரி அமைக்க ஆணையிட்டுள்ளார்கள். இந்த ஆண்டே வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. விவசயாத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் 19 இடங்களில் தடுப்பணை அமைக்கவும், காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.1,450 கோடி மதிப்பில் இரண்டு தடுப்பணைகள் அமைக்கவும், 200 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதுமட்டுமா, கரூர் நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளார்கள். விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படவுள்ளது. கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது எந்தவித வரி உயர்வும் இருக்காது. மாநகராட்சியுடன் சேர்க்கப்படும் ஊராட்சிகளிலும் எந்தவிதமான வரி உயர்வும் இருக்காது. இவ்வாறு தெரிவித்தார்.