PM MODI: விளக்கங்களுக்கு மாற்றாக ஒன்லைன் பஞ்ச்கள் மட்டும் போதுமானதா? என பிரதமர் மோடியை நோக்கி காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடி உரை:
பாகிஸ்தான் உடனான ராணுவ மோதல் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, “ பஹல்காம் தாக்குதலுக்கு இப்படி ஒரு எதிர்தாக்குதல் நடக்கும் என தீவிரவாதிகள் கனவிலும் கூட நினைத்து இருக்க மாட்டார்கள். நமது பெண்களின் குங்குமத்தை அழித்ததற்காக தீவிரவாத முகாம்களின் தலைமையகங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாகவே நிறுத்தியுள்ளோம். கைவிடவில்லை. தீவிரவாதமும், வர்த்தகமும் ஒன்றாக செல்ல முடியாது” என பிரதமர் மோடி பேசினார். ஆனால், அமெரிக்காவின் தலையீடு தொடர்பாக எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை.
அதிபர் ட்ரம்ப் சொல்வது என்ன?
இதனிடையே பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மத்தியஸ்தம் குறித்து பேசுகையில், “உங்கள் இருநாடுகளுடன் நான் அதிகளவில் வர்த்தகம் செய்ய உள்ளேன். எனவே இந்த மோதலை கைவிடுங்கள். மோதலை நிறுத்தினால் நான் உங்களுடன் வர்த்தகம் செய்வேன். இல்லையென்றால் எந்த வர்த்தகமும் இல்லை என்று கூறினே. இதன் மூலமாக உடனே அவர்கள் அமைதிக்கு ஒப்புக்கொண்டனர். இதன் மூலம், மிக மோசமான அணு ஆயுத மோதலை நிறுத்தியுள்ளேன். லட்சக்கணக்கான மக்கள் இதனால் இறந்து இருப்பார்கள்” என ட்ரம்ப் விளக்கமளித்து இருந்தார்.
காங்கிரஸ் கேள்வி:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதிக்கு தனது நடவடிக்கையே காரணம் என ட்ரம்ப் கூறியது குறித்து, பிரதமர் மோடி தனது உரையில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேநேரம், பிரதமர் மோடியின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. அதன்படி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய மிகவும் தாமதமான உரை, சில நிமிடங்களுக்கு முன்பு அதிபர் டிரம்பின் பேச்சால் முற்றிலும் தலைகீழாக மாறியது. பிரதமர் அவற்றைப் பற்றி எதையும் சொல்லவில்லை. அமெரிக்காவின் மத்தியஸ்தத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? பாகிஸ்தானுடனான உரையாடலுக்கான 'நடுநிலை தளத்திற்கு' இந்தியா ஒப்புக்கொண்டதா? ஆட்டோமொபைல்கள், விவசாயம் மற்றும் பிற துறைகளில் இந்திய சந்தைகளைத் திறப்பதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இந்தியா இப்போது அடிபணியுமா?
”அனைத்துக்கட்சி கூட்டம் வேண்டும்”
பிரதமர் உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும் - கடந்த இருபது நாட்களாக அவர் இதனை கவனமாக தவிர்த்து வருகிறார். வரவிருக்கும் மாதங்கள் கடினமான ராஜதந்திரத்தையும் கூட்டுத் தீர்மானத்தையும் கோரும். ஒன் லைன்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் ஆகியவை சரியான பதிலாக இருக்காது. நமது ஆயுதப் படைகளை நாங்கள் நிபந்தனையின்றிப் பாராட்டுகிறோம். ஆனால் பிரதமர் இன்னும் பதிலளிக்க வேண்டியவை நிறைய உள்ளன” என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா வாய்ல வராதா?
கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதுபோன்ற விவகாரங்கள் குறித்து பேசுகையில் மோடி எங்குமே, சீனா என்ற பெயரை கூட குறிப்பிடுவதில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தான், பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தைக்கு உதவியதாக கூறப்படும் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடவும் தற்போது பிரதமர் மோடி தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனில் சீனாவை போன்று அமெரிக்காவின் பெயரும் பிரதமர் மோடியின் வாயில் இருந்து வராதா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேநேரம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் சூழலின்போது, அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் உள்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அவர்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அந்த நேரத்தில் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என மத்திய ரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.