பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கிருந்த ஆதரவாளர்கள் பலத்த கரகோஷங்களை எழுப்பி ஆதரவு கொடுத்தனர். மேடையில் ஓபிஎஸூம் - ஈபிஎஸூம் அமர்ந்திருக்கையில் திடீரென மைக்கை பிடித்து பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அனைத்து தீர்மானங்களும் பொதுக்குழு உறுப்பினர்களால் நிராகரிக்கப்படுவதாக ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து வந்த கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஒற்றைத்தலைமை மற்ற தீர்மானங்களுடன் இணைக்கப்படும் வரை 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து கட்சி ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்தியலிங்கமும் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
அப்போது மேடையில் மைக்கை பிடித்து பேசிய வைத்தியலிங்கம் இது சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என்று பேசி சென்றார். இதனிடையே வெளியே சென்ற ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடக்க இருப்பதாக அதிமுகவின் நிரந்தர அவைத்தலைவராக மாற்றப்பட்ட தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.
ஆனால் இந்த மறுதேதி அறிவிப்பு செல்லாது என வைத்திய லிங்கம் பேசினார். ஏமாற்றத்துடன் வெளியே சென்ற ஓபிஎஸ் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.