அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அவரவர் பதவிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், இவர்கள் இருவரையும் எதிர்த்துப் போட்டியிட யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாத காரணத்தால், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இன்று அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் அதற்கான சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரைப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதிலாக, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் எனத் திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல், இருவரையும் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒற்றை வாக்கின்படி தேர்வு என்றால் எப்படி..?
எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இருக்கும்போது பொதுக்குழு உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு தலைமை இருப்பதால் இரண்டு பேருக்கும் தனித்தனியாக வாக்கு செலுத்தும் நிலை இருந்தது. ஆனால், செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், இவர்கள் இருவரையும் இனி ஒற்றை வாக்கின் அடிப்படையிலேயே அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம்.
தனித்தனியாகப் போட்டியிட முடியாது
அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தனியாகவோ, இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குத் தனியாக யாரும் போட்டியிடமுடியாது. இந்த இரு பதவிக்கும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றால், ஒரே மனுவாகதான் தாக்கல் செய்யப்படவேண்டும். அந்த வகையில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஒரே மனுவாகத் தாக்கல் செய்தனர்.
தேர்தல் ஆணையர்களாக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 3 வெள்ளக்கிழமையும், டிசம்பர் 4 சனிக்கிழமையும் நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனையானது டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. டிசம்பர் 7 செவ்வாய் அன்று தேர்தலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையும் எதிர்த்து யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாத நிலையில், இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். அவர்களிடம் அதற்கான சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்