ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இரண்டாம் நாள் விசாரணைத் தொடங்கியது.
ஓபிஎஸ் மனுத்தாக்கல்:
கடந்த ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், பொதுக்குழுத் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாகக் கூறி அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சிறப்புப் பொதுக்குழுக்கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றம் கேள்வி:
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லாத போது, யார் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் படைத்தவர்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதா? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட முடியாவிட்டால் கட்சி செயல்படாதா? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்? பொதுக்குழுவை கூட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இவற்றிற்கு விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இன்று மதியத்திற்கு ஒத்தி வைத்தார்.
மீண்டும் விசாரணை:
வழக்கின் விசாரணை இன்று தொடங்கியபோது வாதிட்ட ஈபிஎஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று கூறியதோடு, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதிகள் சொல்கின்றன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார் என்று கூறினர். மேலும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும், தலைமைக் கழக நிர்வாகிகள் பதவிகள் தொடர்கின்றன.
2,190 பேர் சம்மதம்:
பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு 2,665 உறுப்பினர்களில் 2,190 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் 2,432 உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து முடிவெட்வுக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்ட ஓபிஎஸ் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் ; இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்ய பொதுக்குழுவை கூட்ட அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு விதிகளை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதிட்டுவருகிறது.
மாறுபட்ட கருத்து:
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்த நிலையில் தற்போது, ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என்று நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு கூறியிருப்பதன் காரணம் குறித்து கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.