தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மீதான பாசம் குறையவில்லை. ஆனால் அவர் கோட்பாடு தவறாக உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தவெக தலைவர் விஜய் மீதான பாசம் குறையவில்லை. விஜயின் கோட்பாடு தவறு என்பதால் அதனை மாற்றச் சொல்கிறோம். அதை மாற்றுவதும் மாற்றாமல் இருப்பதும் விஜயின் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார். 


நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்ததிலிருந்து தமிழக அரசியல் களமே பரபரப்பாக காணப்படுகிறது. மற்றக்கட்சிகள் வாழ்த்துகளும் எதிர்ப்பும் தெரிவித்து ஓய்ந்துவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியின் சீமான் மட்டுமே தொடர்ந்து கடுமையாக சாடி வருகிறார். விஜய் கட்சி ஆரம்பித்து மாநாட்டில் பேசும் வரை தம்பி விஜய் என உருகிய சீமான் அதன்பின் செல்லும் இடங்களிலெல்லாம் சரமாரியாக சாடி வருகிறார். 


தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய விஜய் அனைத்து கட்சிகளையும் சரமாரியாக சாடினார். எல்லாருக்கும் எல்லாம் என்பதே எங்களின் கோட்பாடு. அதில் எந்த சமரசமும் இல்லை. ஜாதி மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் எங்களுக்கு கொள்கை எதிரி. ஊழலில் திளைத்து ஆட்சி செய்பவர்கள் அரசியல் எதிரி என போட்டுத்தாக்கினார் விஜய். 


அதேபோல் சீமானையும் விட்டுவைக்கவில்லை. அரசியல் களத்தில் முதலைகள் இருக்கும் என பயமுறுத்துகிறார்கள். அதெற்கெல்லாம் பயப்படமாட்டோம். எல்லாம் தெரிஞ்சிதான் இங்கு வந்திருக்கோம். தமிழ் தேசியமும் திராவிடமும்தான் எங்கள் கோட்பாடு என பேசினார். 


இதனால் தமிழ் தேசியம் வேறு திராவிடம் வேறு என மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்கும் சீமான் கொதித்தெழுந்துவிட்டார். விஜய்யை சரமாரியாக சாட ஆரம்பித்துவிட்டார். நேற்றையதினம் கன்னியாக்குமரியில் செய்தியாளர்களை சந்தித்த போது கூட விஜய் என்ன ஜெயலலிதா எம்.ஜி.ஆரை விட பெரிய தலைவரா? அவர்களை விட கூட்டம் கூடிவிட்டதா? என கேள்வி எழுப்பினார். மேலும், என்னை நேசிக்கிற, என்னை பின் தொடர்கிற, எனக்கு வாக்கு செலுத்துகிற என் மக்கள் யார் என்று பாருங்கள். பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடியவர்கள் அல்ல என்னை விரும்புகிற மக்கள். போராட்ட களத்தில் தலைவனை தேடுகிற மக்கள்தான் என்னை பின் தொடர்வார்கள். காற்றடிக்கும் திசையெல்லாம் பறக்கிற பதர்கள் எனக்கு வாக்கு செலுத்தமாட்டார்கள். புயலே அடித்தாலும் நகராமல் அதே இடத்தில் இருக்கும் தூய நெல்மணிகள்தான் எனக்கு வாக்கு செலுத்துபவர்கள் என சூளுரைத்தார். 


அதற்கு காரணம் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தவெகவில் இணைந்ததே என சொல்லப்படுகிறது. ஆனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யாரும் வேறு கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை என சீமான் மறுப்பு தெரிவித்திருந்தார்.