ஆந்திராவில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்திற்கு அண்ணாமலை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை தேர்வு செய்யாமல் ஆந்திரப் பிரதேசத்தின் மூத்த பாஜக தலைவர் ஒருவருக்கு அந்த வாய்ப்பினை வழங்கியுள்ளது பாஜக மேலிடம். காலியாக இருந்த மாநிலங்களவை இடத்திற்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்பட பலரின் பெயர் அடிபட்ட நிலையில், பக்கா வெங்கட சத்யநாராயண என்பவர் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலம், அண்ணாமலை எம்பி ஆக்கப்பட்டு, மத்திய அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்படும் என்ற அவரது ஆதரவாளர்களின் கனவு பொய்த்து போனது.
அண்ணாமலைக்கு அல்வா கொடுத்த பாஜக மேலிடம்:
தமிழ்நாட்டில் இன்னும் 12 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக மாறி வருகிறது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீக்கம், அதிமுக - பாஜக கூட்டணி உருவாக்கம் என தொடர் அதிரடி அரங்கேறி வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கி நயினார் நாகேந்திரனுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி தரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்த போதிலும், அதிகாரமே இல்லாத தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியே அவருக்கு வழங்கப்பட்டது.
தலைவர் பதவியை பறித்த காரணத்தால் தேசிய தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டு, மத்திய அமைச்சர் பதவி அவருக்கு தரப்படலாம் என தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றார்போல், பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள ஆந்திராவில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகி, அதற்கு தேர்தல் அறிவிப்பு வெளியானது.
ஆர்எஸ்எஸ்-காரருக்கு ஜாக்பாட்:
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் அவரது இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தனக்கு பெரும்பான்மை இருந்த போதிலும், அந்த இடத்தை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு விட்டு கொடுத்தது தெலுங்கு தேசம் கட்சி. அந்த இடத்திற்கு பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் வெல்ல போதுமான எண்ணிக்கை இல்லாத காரணத்தால் ஆந்திராவில் இருந்து அண்ணாமலை களமிறக்கப்படலாம் என பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டது.
இவரை தவிர அந்த இடத்திற்கு பல பெயர்கள் அடிப்பட்டன. மடிகா சமூகத்தின் இட ஒதுக்கீடுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மண்ட கிருஷ்ண மடிகா, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிப்பட்டன. இந்த நிலையில், காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு யார் போட்டியிடுவார் என்ற அறிவிப்பை பாஜக நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆந்திரப் பிரதேச பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் பக்கா வெங்கட சத்யநாராயண என்பவர், காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு, அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும், கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கும் பாஜக முக்கியத்துவம் வழங்குவது வழக்கமான ஒன்றுதான் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். பீகாரில் இந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பாஜக வாய்ப்பு அளித்திருப்பது கவனிக்க வேண்டியம் விஷயம்.
தலித் வாக்குகளுக்கு குறி:
பிகாரில் யாதவ சமுதாயமும் இஸ்லாமிய சமுதாயமும் பெரும்பான்மையாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கே வாக்களிப்பார்கள். முற்பட்ட சாதியினர், பெரும்பாலும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். எனவே, வெற்றியை தீர்மானிக்கும் தலித் வாக்குகளை குறிவைத்து மாநிலங்களவை தேர்தலில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பாஜக வாய்ப்பளித்திருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக ஆட்சியில் அமைச்சரவை அடிக்கடி மாற்றி அமைக்கப்படாது. பெரும்பாலும் மக்களவை தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில், அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருப்பதால் 2027 வாக்கில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம். ஏற்கனவே, தமிழகத்தை சேர்ந்த எல். முருகன், மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார். மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
ஏற்கனவே, ஒருவருக்கு வேறு மாநிலத்தில் வாய்ப்பு தரப்பட்டுவிட்டதால் அண்ணாமலையும் வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என்றும் முருகன் பதவிக்காலம் முடிந்த பிறகு வேண்டுமானால் அண்ணாமலைக்கு அந்த வாய்ப்பு தரப்படலாம் என பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.