திமுகவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதைக் கண்டித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டித்துள்ளார். 3 ஆம் கட்ட தரப்பு பேச்சாளர் என்னை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார் என செய்தியாளர் சந்திப்பில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறியுள்ளார். ஒரு பெண்ணை இழிவாக பேசினால் , அது யாராக இருந்தாலும் எதிர்த்து சண்டை போட நான் தயார். ஒரு மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் போது , இதை போனால் போதும் என்று விட்டு விட்டால் உங்களை நீங்க பார்த்து கொள்ள முடியல , எங்களை எப்படி பார்த்துக்கொள்வீர்கள் என்று மற்ற பெண்கள் கேட்பார்கள். ஒரு பெண்ணை இவ்வளவு தரக்குறைவாக பேச யாருக்கும் உரிமை கிடையாது. குஷ்புவை சீண்டிப்பார்க்காதீர்கள், தாங்க மாட்டீர்கள் எனவும் கூறியுள்ளார். 


மேலும் அவர், ”பெண்களை கேவலமாக பேசுபவர்கள் தங்களின் தாயின் வளர்ப்பை கேவலப்படுத்துகிறார்கள் என அர்த்தம். திமுகவின் தாய், தந்தை கலைஞர், நீங்கள் அசிங்கமாக பேசுவது அவரை அசிங்கமாக பேசுவதற்கு சமம். நான்கு ஆண்கள் சேர்ந்து கொண்டு பெண்கள் முன்னேறக்கூடாது, தங்களை எதிர்த்து பேசக்கூடாது என நினைக்கிறார்கள். அனைத்து கட்சிக்காரர்களையும் நான் கேட்கிறேன், பெண்களை இழிவாக பேச யார் உரிமை கொடுத்தது. பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமா? நான் இன்று பேசுவது எனக்காக பேசவில்லை ஒவ்வொரு பெண்ணுக்காகவும் பேசுகிறேன். இனிமேல் பெண்களை தரக்குறைவாக பேச  எந்த ஆணுக்கும் தைரியம் வரக்கூடாது. மீறி பேசினால் திருப்பி அடிப்போம்” என பேசினார். 


மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ”திமுகவினர் என் வீட்டில் கற்கள் வீசினார்கள். எதையும் சந்திக்க நான் தயாராகத்தான் உள்ளேன். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே விசாரணைக்கு எடுக்கவுள்ளது.  பெண்களை இழிவாக பேசுங்க என முதலமைச்சர் தீணி போட்டு அவர்களை வளர்க்கிறார். கருணாநிதியின் திமுகவிற்கும் ஸ்டாலினின் திமுகவிற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த பிரச்னை திமுகவினருக்கும் பாஜவினருக்கும் இடையில் இல்லை. திமுகவைச் சேர்ந்தவர் ஒரு பெண்ணை இழிவாக பேசியுள்ளார் என்பது தான்” என அவர் கூறினார். 


மேலும் அவர், "நான் யாரை நம்பியும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. எனது திறமையையை மட்டும் நம்பி தமிழ்நாட்டிற்கு வந்து தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என கூறினார். சிவாஜி கிருஷ்ணனுக்கான தண்டனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, வேறு யாராவதாக இருந்தால், நான்  செருப்பால் அடித்திருப்பேன். அதிகப்படியானோர் வாங்கியுள்ளனர்.  அதற்கான தைரியம் எனக்கு இருக்கிறது. ஆனால் நான் அதை செய்யவிரும்பவில்லை" என குறிப்பிட்டு பேசினார்.