நாம் தமிழர் கட்சி சார்பில் இனஎழுச்சி பொதுக்கூட்டம் தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் விலக்கு அருகே நடந்தது. கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அப்போது பேசிய சீமான், “புரட்சியை முன்னெடுக்க புரட்சிகரமான அரசியல் கட்சி அவசியம். புரட்சிகர அரசியலை முன்னெடுக்கும் இயக்கத்துக்கு புரட்சிகர தத்துவம் இருக்க வேண்டும். இந்திய அரசு, இலங்கையுடன் செய்த 3 ஒப்பந்தங்கள் நம் இனத்துக்கு செய்த மிகப்பெரிய துரோகம். கச்சத்தீவை எந்தவித அடிப்படை விவாதமும் இன்றி தாரைவார்த்து விட்டார்கள். ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை பிரபாகரன் எதிர்த்தார். அதனையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால்தான் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ஒரு கையெழுத்து, தமிழனின் தலையெழுத்தை மாற்றி விட்டது. 13-வது சட்டதிருத்தம் வடக்கு கிழக்கு மாகானங்களை இணைப்பது ஆகும். இதனால் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும். தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், முதலில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். உலக மொழிகளின் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம் என்று பிரதமர் கூறுகிறார். அப்படிப்பட்ட தமிழ் பேசும் மக்களை இந்த தடை உலக அரங்கில் அவமதிக்கிறது. தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக காட்டுகிறது. அகதிகளாக செல்பவர்களை கூட பிற நாடுகள் ஏற்க மறுப்பது இந்த தடைதான். எந்த நாட்டுக்கும் செல்ல விடாமல் தடுப்பது இந்த தடைதான். தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்.
இந்தியா மட்டும் இலங்கை பிரச்சினையில் தலையிடாமல் இருந்து இருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே தனித்தமிழ் ஈழம் உருவாகி இருக்கும். எங்களுக்கு இலக்கு ஒன்றுதான். இனத்தின் விடுதலை. வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள், தாங்களே கிளர்ந்து எழுந்து தங்கள் வரலாற்றை படைப்பார்கள். அதன்படி எங்கள் வரலாற்றை படைக்க மீண்டும் தமிழர்கள் என்று ஒன்றாக எழுவோம்.
விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், அதனை விற்றவர்களுக்கும் நிவாரணம் வழங்குகிறார்கள். குற்றவாளிகளுக்கும் குடும்பம் இருக்கிறது என்கிறார்கள். எல்லா குற்றவாளிகளுக்கும் நிவாரணம் கொடுத்து விட வேண்டியதுதானே. இதுதான் திராவிட மாடல். மக்களின் நலனை நோக்கித்தான் நாம் தமிழர் கட்சியின் சிந்தனை, செயல்பாடுகள் இருக்கிறது. ஆயுதப் போராட்டம் முற்று பெற்றதால், அரசியல் போராட்டம்தான் இருக்கிறது. அது தாய் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. நம் கண் முன்னே இயற்கை வளம் கொள்ளைப்போகிறது. அதனை பாதுகாக்க வேண்டும். நம் பூமியை காப்பாற்ற போராட வேண்டும். நாம் தமிழர் கட்சியினர் சாதி பார்த்து பழக மாட்டோம். சாதி பார்ப்பவர்களுடன் பழகவே மாட்டோம்.
நமக்கு வழங்கப்பட்ட கடமைகள், சிதைந்து அழிந்து கொண்டு இருக்கின்ற தமிழ்தேசிய மக்கள் பாதுகாப்பாக வாழ போராடித்தான் ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதில் இருந்து தமிழர்கள் விலகி நிற்க முடியாது. இது ஒவ்வொரு தமிழர்களின் கடமை. புரட்சி என்பது மக்களால் செய்யப்படும் கிளர்ச்சி என்கிறார் மாசேதுங். அது போன்ற ஒரு நடவடிக்கைதான் தற்போது நாம் செய்யும் புரட்சி. இது சாத்தியமா என்று நினைக்கலாம். தமிழினத்துக்கு போராடுவதற்கு நாம் தமிழர் கட்சி அவசியம். வென்றவர்கள் எல்லாம் எளிதாக வென்றவர்கள் இல்லை. போராடி வென்றவர்கள்தான்.
அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய மலைகளை வெல்ல முடியுமா? இந்த மலைகள் இனி வளராது. ஆனால் தமிழ் இன பரம்பரை வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த மலைகளை அப்புறப்படுத்துவோம். நாங்கள் தமிழ் மக்கள் என்ற கடவுளின் இதயத்தை தொடுவோம். நமக்கு பொறுப்பும், கடமையும் அதிகம் உள்ளது. நமது இலக்கு, பாதை முடிவு செய்யப்பட்டு விட்டது. பயண தூரம் சற்று அதிகமாக உள்ளது. நாம் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். நாம் முழுமையாக களப்பணியாற்ற வேண்டும். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். விமர்சனத்தை தாங்க முடியாதவர்கள் வெற்றி பெற முடியாது. விமர்சனம் கூட ஒருவித பாராட்டுதான். பாராளுமன்ற தேர்தல் களம் காத்து இருக்கிறது. நாம் தனித்துதான் போட்டியிடுகிறோம். எத்தனை தேர்தல் வந்தாலும், எப்போது வந்தாலும் தனித்துதான் போட்டியிடுவோம். அதில் எந்த குழப்பமும் வேண்டாம். துணிந்து களத்தில் நிற்போம். வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கி விட்டார்கள். அது இருக்கும் வரை ஊழலை ஒழிக்க முடியாது. நாம் தோற்கவில்லை. கற்றுக் கொண்டு இருக்கிறோம். இதனை ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஜூன் 13-ந் தேதி முதல் எனது சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. டிசம்பரில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். அதில் சட்ட விதிமுறைகள் வெளியிடப்படும். ஜனவரி முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வோம்” என்றார்.
கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், மாவட்ட செயலாளர் வேல்ராஜ், மாநில மகளிர் பாசறை அருணா சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.