Nirmala Sitharaman : 'திடீரென செய்தியாளர் சந்திப்பை நடத்தி திமுக அரசை விமர்சித்த நிர்மலா’ பின்னணியில் அண்ணாமலை..!

Nirmala Sitharaman Press Meet : 'செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடந்தது என்ன என்பதை அண்ணாமலையிடம் கேட்டுத் தெரிந்துக்கொண்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்’

Continues below advertisement

வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை, வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை நோக்கி அடுக்கடுக்காக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரஸ் மீட்டை நடத்தி முடித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Continues below advertisement

நிர்மலா சீதாராமனை சந்தித்த அண்ணாமலை
நிர்மலா சீதாராமனை சந்தித்த அண்ணாமலை

திமுக அரசு மீது சரமாரி புகார்

மத்திய அரசின் அதிகாரிகள் புடைசூழ நடத்தப்பட்ட அந்த பிரஸ்மீட்டில், திமுக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டை பொழிந்திருக்கிறார் அவர். குறிப்பாக, மழை வெள்ளம் தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை, முன் கூட்டியே மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் சென்று பணிகளை முடுக்கிவிடவில்லை, தமிழ்நாடு அரசு கேட்பதற்கு முன்னதாகவே தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பிவிட்டோம் என்றெல்லாம் பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினையே நேரடியாக தாக்கி பேசியிருக்கிறார்.

மக்களை பார்க்காமல் முதல்வர் டெல்லி சென்றது ஏன் ?

மழை வெள்ளத்தால் மாநில மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவர்களை நேரில் சென்று பார்க்காமல், கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தது ஏன் என்றும், டெல்லியில் தனது பணிகளையெல்லாம் முடித்த பின்னர் போகிற போக்கில் பிரதமரை பார்த்து கோரிக்கை மனுவை ஸ்டாலின் கொடுத்ததாகவும் பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய பிரஸ் மீட்டின்போது உதயநிதி ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை அவர்.  சனாதனம் குறித்து சர்ச்சையாக பேசிய உதயநிதி,  இப்போது அப்பன், ஆத்தா என்று அரசியல் நாகரிகம் இன்றி பேசுவதாகவும், அவருக்கு நாவடக்கம் தேவை என்ற தொனியிலும் கடுமையான எதிர்வினையை நிர்மலா சீதாராமன் ஆற்றிருக்கிறார்.

திமுக அரசு  குற்றச்சாட்டுக்கு மாநில பாஜகவினர் பதிலடி கொடுப்பார்கள் என்று மட்டுமே எதிர்பார்த்தவர்களுக்கு திடீரென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே செய்தியாளர் சந்திப்பை டெல்லியில் நடத்தி, அதில் தமிழிலும் பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐடியா கொடுத்த அண்ணாமலை - அதிர்ச்சியில் திமுக ?

இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக பதிலடி கொடுக்கலாம் என்ற ஐடியாவை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே பாஜக தலைமைக்கு தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையிலேயே அவசர அவசரமாக செய்தியாளர் சந்திப்புக்கு மத்திய செய்தி வெளியீட்டு துறை ஏற்பாடு செய்தது. அதே நேரத்தில், செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

அந்த ஆலோசனையில்தான், தமிழ்நாட்டில் மழை பாதிப்பின்போது என்னென்ன நடந்தது, அமைச்சர்கள் யார் யார் களத்திற்கு சென்றார்கள், என்ன மாதிரியான புகார்களையெல்லாம் மத்திய அரசை நோக்கி திமுகவினர் வீசி வருகின்றனர் என்ற விவரங்களின் பட்டியலை அண்ணாமலை கொடுத்திருக்கிறார். அதோடு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே வெள்ளத்தில் சிக்கி இரண்டு நாட்களுக்கு பின்னர் மீட்கட்டப்பட்ட தகவலையும், வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு உடனடியாக விரையாமல் சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பணிகளை நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மேயர் உள்ளிட்டோர் கவனித்து வந்ததையும் தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை சொன்ன தகவலின் அடிப்படையிலேயே திமுகவை விமர்சித்து பேசிய நிர்மலா சீதாராமன், அனிதா ராதாகிருஷ்ணன், கேன்.என்.நேரு தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த செய்தியை, பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனி திமுக அரசு மத்திய அரசு மீது புகார் சொன்னால் உடனுக்குடன் அதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்தே பதிலடி கொடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாகவும் அது தொடர்பான தகவல்களை தனக்கு உடனுக்குடன் பாஸ் செய்ய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் அவர் தெரிவித்திருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறியுள்ளன.

Continues below advertisement