முன்னாள் அமைச்சரை பாமாயில் என்று தரக்குறைவாக கரூர் மாநகராட்சி மேயர் கவிதா விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கும், தொடர்ந்து 11.30 மணிக்கு அவசரக் கூட்டமும் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 48 வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து பேச துவங்கினர். அப்போது 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணன் என்பவர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தங்கள் பகுதியில் போதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று கூறி அவரை "பாமாயில்" என்று குறிப்பிட்டு தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுக கவுன்சிலர்கள் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை "அமாவாசை" என்று விமர்சனம் செய்தனர். இதனால் இருதரப்பு கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் அதிமுக கவுன்சிலர் சுரேஷை வெளியே தள்ளி கதவை சாத்தினர். அப்போது கூச்சலிட்டபடி வெளியேறிய கவுன்சிலர் சுரேஷிடம் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தனது பதவியை மறந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை "பாமாயில்" என்பது மக்கள் கொடுத்த பட்டம் என்று குறிப்பிட்டு திமுக கவுன்சிலர் கூறியதை ஆமோதிக்கும் வகையில் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
கவுன்சிலர்கள் தவறாக பேசும் போது அதை திருத்த வேண்டிய நிலையில் உள்ள மாநகராட்சி மேயரே, முன்னாள் அமைச்சர் என்றும் பாராமல் தரக்குறைவாக விமர்சனம் செய்தது கரூர் மாநகராட்சி கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.