நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வஹாப்பிற்கும், மேயருக்குமிடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில் அப்துல் வஹாப்பின் ஆதரவு கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தனர். இதனால் ஏற்பட்ட மோதல் போக்கில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்பை பொறுப்பில் இருந்து நீக்கி தலைமை அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் அவருக்கு பதில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாளை தொகுதி எம்எல்ஏ வுமான டிபி எம் மைதீன்கானை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தது. அதன் பின்னரும் கடந்த வாரம் நடந்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் பிரச்சினை எழுந்தது. தொடர்ச்சியாக நெல்லை மாநகராட்சியில் மக்களின் பிரச்சினைகளுக்காக மன்ற கூட்டம் நடத்தாமல் தங்களுக்குள் பிரச்சினை செய்து கொள்வதுடன் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதாக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர்.


இந்த நிலையில் தற்போது நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டிபி எம் மைதீன்கானுக்கு எதிராக நெல்லை திமுக வட்ட செயலாளர்கள் 31 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக இது தொடர்பாக 31 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றையும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளனர். அதில் டிபிஎம் மைதீன்கானை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து கட்சி பணிகள் முறைப்படி நடைபெறவில்லை. நிர்வாக சீர்கேடுகள் அதிக அளவில் இருக்கிறது. கட்சியில் உள்ள மாவட்ட, மாநகர, பகுதி கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என யாரையும் மதிப்பதில்லை, முறைப்படி தகவலும் தருவது இல்லை. இதனால் நிர்வாகிகளுக்கிடையே பல குளறுபடிகள் ஏற்பட்டு பல அணிகளாக மத்திய மாவட்டம் பிரிந்து இயங்குகிறது.  இதுவரை டிபிஎம் மைதீன்கான் மாவட்டத்தில் எந்த முக்கிய பொறுப்பிலும் இருந்தது கிடையாது. அதனால் அவருக்கு கட்சியை எவ்வாறு முறையாக கொண்டு செல்ல வேண்டும், எப்படி நிர்வாகம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை நிர்வாக கட்டமைப்பு பற்றிய புரிதல் அவருக்கு இல்லை.  எனவே அவருக்கு கட்சியின் விதிமுறைகளையும், வழிமுறைகளையும் நிர்வாகிகளை எப்படி அணுக வேண்டும், எவ்வாறு கட்சி பொறுப்பில் இருந்து செயல்பட வேண்டும் என்பதையும் அவருக்கு முறையாக தெரிவித்து கட்சி அமைப்பை நடத்த வழி செய்யுங்கள் என எழுதியுள்ளனர்.


மேலும் இதுகுறித்து அவரிடம் முறையிட்டால் எனக்கு எல்லாம் தெரியும், நான் 40 வருடம் அரசியலில் இருக்கிறேன். என்னிடம் மோதி பார்க்க நினைத்தால் உங்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டல் விடுக்கிறார். அவரது நடைமுறையை மாற்ற தலைமை அவருக்கு அறிவுரை கூற வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.  ஏற்கனவே கடந்த 3 ஆம் தேதி  நடந்த நிவாகிகள் கூட்டத்தை அவர் நடத்திய போது ஏற்பட்ட கூச்சல் குழப்பம் சச்சரவு நிகழ்வுகள் சமூக வலைதளங்களில்  நிலவி கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதனால் மாவட்ட பொறுப்பாளர் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளும் வரை தாங்கள் இது போல  நடக்கும் செயல் வீரர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளி நடப்பு செய்கிறோம். அதுவரை நிர்வாகிகளை வழி நடத்த தொகுதி பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அக்கடித்தத்தில் எழுதியுள்ளனர். மேலும் அக்கடித்தத்தை திமுக பொதுச்செயலாளர், கழக முதன்மை செயலாளர், உள்ளிட்டோருக்கும் அனுப்பிள்ளனர். ஏற்கனவே நெல்லை மாநகராட்சியில் திமுக கவுன்சிலருக்கும், மேயருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வகாப் மாற்றப்பட்டு டிபி.எம். மைதீன் கான் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது செயல்பாடுகளுக்கும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  நெல்லை மாநகர  திமுகவினரிடையே நிலவும் தொடர் பிரச்சினை தலைமைக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாக அக்கட்சியினரிடையே பேசப்படுகிறது.