2024ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது, குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கியது, அடுத்தடுத்த வரிசை எண்களைக் கொண்ட 6 தேர்வர்கள், தேசிய அளவில் முதலிடம் பெற்றது, தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் நீட் தேர்வு முடிவுகளில் எழுந்து வருகின்றன.
நீட் தேர்வில் முறைகேடு நடந்ததா? காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் நீட் குளறுபடி குறித்துக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து தேசிய தேர்வு முகமை (NTA) தலைவர் பிரதீப் குமார் ஜோஷி விசாரிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையின் தலைவரையே அதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க நியமனம் செய்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து கேரள காங்கிரஸ் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது."இதை நம்ப முடியவில்லை. பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷியே, தேசிய தேர்வு முகமையின் தலைவராக உள்ளார். தேசிய தேர்வு முகமைதான் நீட் தேர்வை நடத்துகிறது.
பங்கமாக கலாய்த்த கேரள காங்கிரஸ்: நீட் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து மோடி அரசால் பிரதீப் குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய வழக்கை விசாரிக்க தானே நியமிக்கப்பட்டுள்ளார். இதை உங்களால் நம்ப முடிகிறதா? மக்களைப் பற்றி மோடி என்ன நினைக்கிறார்? நாம் அனைவரும் முட்டாள்களா?" என விமர்சித்துள்ளது.
நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளநிலை கலந்தாய்வுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். எனினும் இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமைக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கூறி, இதுதொடர்பான அனைத்து வழக்குகளும் ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.