சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (புதன்கிழமை ) சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி அமைப்பில் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் பணிகளை விளம்பரப்படுத்துவதற்கான, ரூ.350 மதிப்பிலான பேனருக்கு ரூ.7,906 அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேனர் விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தை மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் அரசு வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.


இந்நிலையில் எடப்படி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்பட்டு வரும் "நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவல்கள் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் காணப்பட்டது.


இந்த தவறான தகவல் குறித்த விளக்கம் பின்வருமாறு: ஊரகப்பகுதிகளில் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை  "நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" என்ற சிறப்பு "மக்கள் இயக்கம்", அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டத்தின் போது துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை,  கழிவுநீர் மேலாண்மை மற்றும்  நெகிழி கழிவு மேலாண்மை ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராமப்புற மக்களிடையே, மனமாற்றத்தை ஏற்படுத்திட முதலமைச்சர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டது.  ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


பேனருக்கான செலவு எவ்வளவு?:


விளம்பர பதாகைகள் நிறுவப்பட்டது தொடர்பாக மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி, அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள்  மூலம் 27 மாவட்டங்களில் இந்த விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன.  ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சிகள் வாயிலாக அப்பகுதியிலுள்ள அச்சகங்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 84,653 எண்ணிக்கையிலான விளம்பரப் பதாகைகள் பல்வேறு அளவுகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன.  ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும் இவற்றிற்கான சராசரி மதிப்பீடாக  பேனர் ஒன்றிற்கு, சரக்கு மற்றும் சேவை கட்டணத்துடன் சுமார் ரூ.611 செலவிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட, பேனர் ஒன்றுக்கு ரூ.7,906    செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது முற்றிலும் தவறானது என, தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது






இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் பெரியகருப்பன் விளக்கமளித்துள்ளார்.


தூய்மை இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நம்ம ஊரு சூப்பர் பேனர் அச்சிடப்பட்டது என்றும், ரூ.611 விலையில், மொத்தம் 84 ஆயிரத்துக்கும் அதிகமான பேனர்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் தனிப்பட்ட நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்ததாக கூறுவது தவறு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.