பாஜக கூட்டணியில் இருந்து ஒபிஎஸ், டிடிவி தினகரன் என அடுத்தடுத்து விலகுவதாக அறிவிவித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.நாங்கள் கூட்டணியில் இருந்து விலக நயினார் நாகேந்திரன் மட்டுமே காரணம் என்றும், அவர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே ஆதரவாக இருப்பதாக டிவிவி தினகரன் கூறியுள்ள நிலையிலும் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது அதிமுக – பாஜக கூட்டணியின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
ஒரு மணி நேர சந்திப்பில் என்ன பேசப்பட்டது..?
இந்த சந்திப்பின்போது, மதுரையில், அக்டோபர் முதல் தேதியில் தான் தொடங்கவிருக்கும் பிரச்சார பயணத்தை துவங்கி வைக்க வருமாறு நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு உடனடியாக இசைவு தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தான் கண்டிப்பாக வந்து பயணத்தை தொடங்கி வைப்பதாக நயினாரிடம் உறுதியளித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக..?
இருவருடையே நடைபெற்ற ஒரு மணி நேர சந்திப்பின்போது இதுமட்டுமின்றி பல முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறன. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பாக இருவரும் அதிகம் பேசிய நிலையில், பாமக மற்றும் தேதிமுக கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்தும் அது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்று வரும் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தென் மாவட்டத்தில் செல்வாக்கு உள்ள புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையை இருதரப்பிலும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணியை ஒருங்கிணைக்க புதிய குழு
இதற்காக அதிமுக – பாஜக அடங்கிய குழு ஒன்றை விரைவில் எடப்பாடி மற்றும் நயினார் ஆகிய இருவரும் தேர்வு செய்ய அறிவிக்கவுள்ளதாகவும், அப்படி அறிவிக்கப்படும் இரு கட்சி தலைவர்களும் புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவைகளை தீவீரப்படுத்துவது தொடர்பாகவும், திமுக அமைச்சர்கள் மீது இருக்கும் அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளிட்டவற்றை மத்திய பாஜக அரசு மூலம் மீண்டும் கையெலெடுக்க வைக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இரு தலைவர்களிடையே நடைபெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த சந்திப்பின்போது சசிகலா, தினகரன், ஒபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் பற்றி விவாதிக்கப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.