காவிரி விவகாரத்தை கர்நாடகா மாநில அரசு காவிரி மேலாண்மை வாரியம் தீர்ப்பினை மதிக்காமல் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் உள்ளது. நீதிமன்றம் தண்ணீர் தர வேண்டும் எனக் கூறியும் கர்நாடகா மாநில அரசு இதுவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் குருவை சம்பா சாகுபடி செய்ய காத்திருக்கும் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
காவிரி போராட்டம்:
தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்:
இந்த நிலையில் இன்று தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கர்நாடகா மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கர்நாடகாவிற்கு கண்டனம்:
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், வெள்ளையர்கள் காலத்தில் கூட கர்நாடகாவில் இருந்து 419 டி எம் சி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் எங்களது உரிமை மறுக்கப்படுகிறது. அது முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய் அரசுகளாக இருந்தாலும், இப்போது ஆண்டு வரும் மோடியின் அரசாக இருந்தாலும் 1968 ல் ஹேமாவதி அணையை கட்டுவதற்கு அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வராக இருந்த அண்ணாதுரையும், அப்போது பொதுத்துறை அமைச்சராக இருந்த கருணாநிதியும் கண்டிக்காத காரணத்தினால் நமது மேட்டூர் அணைக்கு வர வேண்டிய தண்ணீரை மூன்று அணைகளில் தடுத்து தமிழகத்தின் உரிமையை பறித்துக் கொண்டிருக்கும் கர்நாடகா அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். 1991 ல் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து கர்நாடகா விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழக அரசுக்கு உதவி:
கர்நாடகாவில் இருந்த தமிழர்களை அடித்து தமிழகத்திற்கு அகதிகளாக அனுப்பினர். லாரி ஓட்டுனர்களை அடித்து தொந்தரவு செய்தும், 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தும் விதமாக பந்த் நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. ஆனால் இனிமேல் நாம் தமிழர் கட்சியினர் வேடிக்கை பார்க்க மாட்டோம். தேவைப்பட்டால் பதிலடி கொடுக்க இந்த படை தயாராகி வருகிறது.
தமிழக அரசுக்கு இது உதவியாக இருக்கும். தமிழக அரசு, அரசாங்க இருப்பதால் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் சட்டத்தின்படி நடப்பவர்கள் அல்ல, மனசாட்சி படி இயங்குபவர்கள். எனவே எந்த வித எதிர்ப்பையும் எதிர்க்க நாங்கள் தயாராக உள்ளோம். கர்நாடகா அரசும், மத்திய அரசும் குறிப்பிட்ட நாட்களுக்குள் தண்ணீர் தர மறுத்தால் எதிர்வினை கடுமையாக இருக்கும் எனவும் எச்சரித்தார்.